விஜயுடன் காங்கிரஸ் கூட்டணி? தனிக்கட்சி தொடங்குவார் ப சிதம்பரம்? பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை! சைலண்ட் மூடில் காங்கிரஸ்!
Congress alliance with Vijay Will Chidambaram start his own party Annamalai created a stir Congress in silent mode
பாஜகவின் தமிழக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தால், ப.சிதம்பரம் புதிய கட்சி தொடங்கி திமுகவுடன் கூட்டணி வைப்பார் என அவர் கூறியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம், “தமிழக காங்கிரஸில் ராகுல் காந்திக்கு எதிரான கருத்துகள் நீண்ட காலமாக இருந்து வருகிறதே?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தமிழக காங்கிரஸ் கட்சியில் இரண்டு குழுக்கள் மட்டுமே இருப்பதாக தெரிவித்தார். ஒன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் மேலிடத்துக்கு ஆதரவான குழு, மற்றொன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவான குழு. தமிழக மக்களுக்காக பேசும் குழு காங்கிரஸில் இல்லை என கடுமையாக விமர்சித்தார்.
மேலும், “இன்று காலை ஒரு பெரிய நாளிதழில், காங்கிரஸ் கட்சி விஜயுடன் கூட்டணி வைத்தால் ப.சிதம்பரம் புதிய கட்சி தொடங்கி திமுகவுடன் கூட்டணி வைப்பார் என்று செய்தி வந்தது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் டேட்டா அனலிட்டிக்ஸ் பிரிவைச் சேர்ந்த ஒருவர் விஜயை சந்தித்து புகைப்படம் வெளியிடுகிறார். தமிழகத்தின் கடன் நிலை குறித்து பேசுகிறார். இதற்கு நேர் எதிராக ஜோதிமணி வேறு கருத்து சொல்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை ஒரு கருத்து, ராகுல் காந்தி வேறு கருத்து. இதனால் காங்கிரஸ் என்ற கட்சியே கதவை சாத்தும் நிலைக்கு வந்துவிட்டது” என அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்த நல்ல தலைவர்கள் பலர் தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் (டிஎம்கே) கட்சியில் இருப்பதாகவும், காமராஜர் காலத்து கதர் சட்டை அணிந்த அரசியல்வாதிகள் ஜிகே வாசன் தலைமையை ஏற்று அந்தக் கட்சிக்கு சென்றுவிட்டதாகவும் கூறினார். “இன்றைய காங்கிரஸ் என்பது காமராஜரை எதிர்த்து தோற்கடிக்க முயன்ற இந்திரா காங்கிரஸ் தான்” எனவும் விமர்சித்தார்.
2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி இந்த பக்கம் – அந்த பக்கம் சண்டையிட்டு நடுரோட்டில் நிற்கும் நிலைக்கு வந்துவிட்டது என்றும், குதிரை பேரம், அதிக சீட், ஆட்சியில் பங்கு என பல கோரிக்கைகளை வைத்து அரசியல் செய்து வருவதாகவும் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார். மேலும், தமிழக காங்கிரஸ் தலைவர்களை சமாதானப்படுத்த காங்கிரஸ் மேலிட தலைவர்கள் அடிக்கடி டெல்லியில் இருந்து வருவதாகவும், இதனால் கட்சியின் நிதிநிலை கூட பாதிக்கப்படுவதாகவும் சாடினார்.
“இந்தியாவில் எப்படி காங்கிரஸ் கட்சி தேய்ந்து வருகிறதோ, அதேபோல் தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறது” என்று கூறி தனது விமர்சனத்தை அண்ணாமலை நிறைவு செய்தார்.
English Summary
Congress alliance with Vijay Will Chidambaram start his own party Annamalai created a stir Congress in silent mode