கல்குவாரி விபத்தில் இறந்தவர்களுக்கு இழப்பீடு...! முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு
Compensation for those who died in the quarry accident Chief Minister MK Stalin announces
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, சிவகங்கையில் சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ்.கோட்டையை அடுத்த மல்லாங்கோட்டை கிராமத்தில் மேகா மெட்டல் குவாரி என்ற பெயரில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தினக்கூலி தொழிலாளர்களாக, சுற்று வட்டார பகுதிகைளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று காலையில் வழக்கம் போல் பணிக்கு வந்த தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் பாறைகளை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மண் சரிந்ததில் குவாரியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர். இதில் உயிரிழந்துள்ள 5 பேர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கி முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் முக ஸ்டாலின்:
இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,"சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், மல்லாக்கோட்டை கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான கல் குவாரியில் இன்று (20.5.2025) காலை எதிர்பாராதவிதமாக பாறை மற்றும் மண் சரிந்து விழுந்த விபத்தில் கல் குவாரியில் பணி செய்துகொண்டிருந்த முருகானந்தம், ஆறுமுகம், கணேசன், ஆண்டிச்சாமி மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேரந்த ஹர்ஷித் ஆகிய ஐந்து நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்களை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி மீட்பு நடவடிக்கைளை மேற்கொள்ளவும் அறிவுத்தினேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மைக்கேல் என்பவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் " என்று தெரிவித்துள்ளார்.அதுமட்டுமின்றி இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Compensation for those who died in the quarry accident Chief Minister MK Stalin announces