#நேரலை : மருத்துவர் இராமதாஸுக்கு பாராட்டு விழா தொடங்கியது.!  - Seithipunal
Seithipunal


 

வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு என்பது பல்லாண்டு கால கனவு ஆகும். அந்தக் கனவுக்கு உயிர் கொடுப்பதற்கான போராட்டங்களை சரியாக 41 ஆண்டுகளுக்கு முன் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் தான் தொடங்கினார். 

சிதறிக்கிடந்த அமைப்புகளை ஒன்று படுத்தி வன்னியர் சங்கத்தைக் கட்டமைத்த அவர் தான் வன்னியர்களின் சமூக, கல்வி, பொருளாதார நிலை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்ற உண்மையை புள்ளி விவரங்களுடன் இந்த உலகத்திற்கு எடுத்து வைத்தார். 

அதன் பிறகு தான் வன்னியர்களின் வாழ்க்கை நிலை குறித்தும், அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் சமூக நீதிக்கு ஆதரவானவர்களே புரிந்து கொண்டனர். ஆனாலும், சமூகநீதியை வெல்ல அது போதுமானதாக இல்லை.

வன்னியர் தனி இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை ஆட்சியாளர்களின் காதுகளில் விழச் செய்வதற்கே எட்டு ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. அந்தப் போராட்டங்களின் போது காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு மற்றும் அடக்குமுறைகளில் 21 உயிர்களை இழக்க நேரிட்டது. 

பல லட்சக்கணக்கான பாட்டாளிகள் உரிமைக்காக போராடி சிறை சென்றனர்; பெண்கள் கூட தாக்குதல்களுக்கும், அடக்குமுறைகளுக்கும், அவமானங்களுக்கும் ஆளாக்கப்பட்டனர். அதற்குப் பிறகும் கூட இட ஒதுக்கீடு எட்டாக்கனியாகவே இருந்தது.

1989-ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட அரசு மருத்துவர் இராமதாஸ் அவர்களை அழைத்துப் பேசியது. மருத்துவர் அய்யா அவர்கள் வன்னியர்களுக்கு மட்டும் 20% தனி இடஓதுக்கீடு கோரினார். ஆனால், அரசோ வன்னியர்கள் உள்ளிட்ட 108 சமுதாயங்களைக் கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற புதிய இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஏற்படுத்தி அதற்கு 20% இட ஒதுக்கீடு அளித்தது. 

அந்த ஒதுக்கீடு வந்த பிறகும் கூட போராடிய மக்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை; வளர்ந்த சமூகங்களும்,  அரசியல் செல்வாக்கு பெற்ற சமூகங்களும் தான் அந்த இட ஒதுக்கீட்டை சூறையாடின. வன்னியர்களின் வாழ்க்கை நிலை பெரிதாக முன்னேறவில்லை. எம்.பி.சி இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு பயனளிக்கவில்லை.

அந்த நிலையை மாற்றுவதற்காகத் தான் அதன்பிறகும் தொடர்ந்து 32 ஆண்டுகளாக மருத்துவர் இராமதாஸ் அவர்கள் போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்திலும் அடக்குமுறைகள், துப்பாக்கிச் சூடுகள், உயிரிழப்புகள் நிகழ்ந்து கொண்டு தான் இருந்தன. ஆனாலும், மனம் தளராமல் போராடிய மருத்துவர் இராமதாஸ் அவர்கள், கடந்த இரு ஆண்டுகளாக அதிமுக அரசிடம் இட ஒதுக்கீடு கோரி அழுத்தங்களைக் கொடுத்தார். 

கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கி இந்த ஆண்டின் தொடக்கம் வரை இரு மாதங்கள் கடுமையான போராட்டங்களை நிகழ்த்தியதால் தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் கடந்த 26.02.2021 அன்று சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இப்போது மருத்துவர் இராமதாஸ் அவர்களின் அழுத்தத்தால் தான் நடைமுறைக்கு வந்துள்ளது.

வன்னிய மக்களின் வாழ்வில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தவிருக்கும் இந்தச் சட்டம்  இயற்றப்பட்டு, நடைமுறைக்கு வருவதற்கு முழு முதல் காரணமாக இருந்த இந்திய மூத்த தலைவர்களில் ஒருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவருமான மருத்துவர் இராமதாஸ் அவர்களுக்கு, பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் ஆகிய 3 அமைப்புகளும் இணைந்து இணையவழியில் பாராட்டு விழா நடத்த தீர்மானித்து, இன்று (31.07.2021 சனிக்கிழமை) பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெறும் இந்த பாராட்டு விழாவில், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, சமூக முன்னேற்ற சங்கத் தலைவர் சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். 

முன்னாள் மத்திய அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும், பிற மூத்த தலைவர்களும் சிறப்புரையாற்றுகின்றனர். பாராட்டு விழாவின் நிறைவாக மருத்துவர் இராமதாஸ் அவர்கள் ஏற்புரையாற்றுகிறார். இந்த விழாவில் பா.ம.க. மற்றும் அதன் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் இணைய வழியில் பங்கேற்று உள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

commendation ceremony for Dr Ramadoss


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->