கோவை கொள்ளைச் சம்பவம்: சுட்டுப்பிடிக்கப்பட்ட உ.பி. கொள்ளையர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலி!
Coimbatore UP robbers dead
கோவையில் அடுத்தடுத்து 13 வீடுகளில் கொள்ளையடித்த வழக்கில் சுட்டுப்பிடிக்கப்பட்ட உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று கொள்ளையர்களில் ஒருவரான ஆசிப் (48), சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (நவ. 30) உயிரிழந்தார்.
கொள்ளைச் சம்பவம்
கோவை கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் உள்ள அரசு அலுவலர்கள் வசிக்கும் பிளாக்குகளில், வெள்ளிக்கிழமை (நவ. 28) பிற்பகலில் மொத்தம் 13 வீடுகளில் துணிகரத் திருட்டுச் சம்பவம் நடைபெற்றது.
கொள்ளை விவரம்: இதில், ஒரு நில எடுப்புப் பிரிவு வருவாய் அலுவலர் வீட்டின் 30 பவுன் உட்பட மொத்தம் 42 பவுன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளிப் பொருள்கள், மற்றும் ரூ. 1.50 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
கைது நடவடிக்கையும் மரணமும்
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்ததில், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிப் (48), இர்ஃபான் (45), கல்லூ ஆரிப் (60) ஆகிய 3 பேர் ஈடுபட்டதும், அவர்கள் குனியமுத்தூர் அருகே பதுங்கியிருப்பதும் கண்டறியப்பட்டது.
சுட்டுப்பிடிப்பு: சனிக்கிழமை காலை அந்தப் பகுதிக்குச் சென்ற போலீஸார், மூவரையும் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
காயமடைந்த மூன்று பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், காலில் காயம் அடைந்த உத்தரப்பிரதேசம் ஜில்லாகாசிபூரைச் சேர்ந்த ஆசிப், தொடர்ந்து ரத்தம் வெளியேறியதால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
English Summary
Coimbatore UP robbers dead