தமிழக நிதி நெருக்கடிக்கு தீர்வு காண டெல்லி செல்லும் முதல்வர் விஜய் பிரதமர் மோடி ராகுல் காந்தியுடன் முக்கிய ஆலோசனை
Chief Minister Vijay to go to Delhi find solution Tamil Nadu financial crisis Important meeting Prime Minister Modi and Rahul Gandhi
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரும் சோகமாக மாறி, 41 பேரின் உயிரிழப்புக்கு காரணமானது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, கடந்த ஜனவரி 12 மற்றும் 19-ந் தேதிகளில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் நேரில் ஆஜராகியிருந்தார்.அன்றைய தினத்தில் ஒரு கட்சித் தலைவராக டெல்லி பயணம் மேற்கொண்ட விஜய், தற்போது தமிழகத்தின் முதல்-அமைச்சராக தேசிய அரசியல் அரங்கில் மீண்டும் கவனம் ஈர்க்கும் வகையில் முக்கிய அரசியல் பயணத்திற்குத் தயாராகி வருகிறார்.

இந்த டெல்லி பயணத்தின் போது, நரேந்திர மோடி, அமித் ஷா, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தேசிய அரசியல் தலைவர்களை சந்தித்து முக்கிய ஆலோசனைகள் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்காக பிரதமர் அலுவலகத்தில் நேரம் கோரப்பட்டுள்ளதாகவும், பிரதமரின் தொடர்ச்சியான அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் காரணமாக இதுவரை நேரம் உறுதியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரம் ஒதுக்கப்பட்டவுடன் உடனடியாக விஜய் டெல்லி பயணம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்த பயணம் வெறும் அரசியல் சந்திப்புகளுக்காக மட்டுமல்லாமல், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, நிதி தேவைகள் மற்றும் மத்திய நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக வலுவான கோரிக்கைகளை முன்வைக்கும் நோக்கத்துடனும் அமைய இருப்பதாக தெரிகிறது.
இதற்கிடையில், கடந்த வாரம் மாநிலத்தின் நிதிநிலை தொடர்பாக உயரதிகாரிகளுடன் விஜய் விரிவான ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது முந்தைய ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட நிதிச் சுமைகள் குறித்து அதிகாரிகள் விளக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதி நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசுடன் இணக்கமான அணுகுமுறையை பின்பற்றுவது அவசியம் என அதிகாரிகள் எடுத்துரைத்த நிலையில், “மத்திய நிதியை மட்டுமே சார்ந்திருக்காமல் மாற்று வருவாய் வாய்ப்புகள் எதுவும் உருவாக்க முடியாதா?” என விஜய் கேள்வி எழுப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கு பதிலளித்த நிதித்துறை அதிகாரிகள், “2026-2027-ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை அவசரமாக தயாரிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. குறுகிய காலத்தில் புதிய வருவாய் ஆதாரங்களை உருவாக்குவது சாத்தியமில்லை. எனவே மத்திய அரசின் நிதி உதவியை பெறுவதுதான் உடனடி தீர்வாக இருக்கும்” என விளக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடியுடனான சந்திப்பில் தமிழகத்திற்குத் தேவையான முக்கிய கோரிக்கைகள் மற்றும் நிதி திட்டங்கள் அடங்கிய பட்டியலை தயாரிக்கும் ஆரம்பகட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒருபுறம் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுடன் அரசியல் மற்றும் நிர்வாக ஆலோசனைகள் நடைபெற உள்ள நிலையில், மறுபுறம் காங்கிரஸ் தலைவர்களுடனும் நல்லுறவு பேச்சுவார்த்தை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டெல்லி பயணம் குறித்த தகவலை ராகுல் காந்தியிடம் விஜய் தொலைபேசி வாயிலாக ஏற்கனவே பகிர்ந்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
English Summary
Chief Minister Vijay to go to Delhi find solution Tamil Nadu financial crisis Important meeting Prime Minister Modi and Rahul Gandhi