மணிப்பூரின் இளம் சமூக ஆர்வலரிடம் இருந்து வந்த கோரிக்கை; உடனடியாக மாற்றம் செய்த முதலமைச்சர் விஜய்..!
Chief Minister Vijay Heeds the Request from a Young Social Activist in Manipur
அரசு அலுவலகங்களில் உள்ள முக்கிய பிரமுகர்களின் நாற்காலிகளில் நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் 'துண்டு போடும் பழக்கத்திற்கு' முற்றுப்புள்ளி வைக்குமாறு, மணிப்பூரைச் சேர்ந்த இளம் காலநிலை ஆர்வலர் லிசிப்ரியா ( Licypriya Kangujam) கங்குஜம் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள், முதலமைச்சர் விஜய் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்போ அல்லது விளம்பரமோ இன்றி, தனது நாற்காலியில் இருந்த பாரம்பரிய வெள்ளைத் துண்டை அகற்றியுள்ளார்.
முன்னதாக மணிப்பூர் காலநிலை ஆர்வலர் லிசிப்ரியா கங்குஜம் தனது எக்ஸ் பக்கத்தில், ''நாற்காலிகளில் வெள்ளைத் துண்டுகளை வைக்கும் வழக்கம் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மட்டுமல்லாமல் கீழ்நிலை அதிகாரிகளாலும் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. முதலமைச்சர் விஜய் முன்மாதிரியாகத் திகழ வேண்டும். இந்த வழக்கத்தைக் கைவிடுவதன் மூலம் ஒரு அடையாளப்பூர்வமான மாற்றத்தைத் தொடங்க வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

லிசிப்ரியா கங்குஜம் பதிவிற்கு முதல்வர் விஜய்யோ அல்லது தமிழக அரசோ எந்தப் பதிலும் அளிக்கவில்லை. ஆனாலும், சமீபத்திய அதிகாரப்பூர்வ கூட்டங்களில் இருந்து வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மூலம், முதலமைச்சர் விஜய், லிசிப்ரியா கங்குஜத்தின் கருத்தை கவனித்திருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த மே 14 அன்று, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தொழில்கள், முதலீட்டு மேம்பாடு மற்றும் வர்த்தகத் துறையின் ஆய்வுக் கூட்டத்தின் போது, முதலமைச்சர் அலுவலகத்தால் பகிரப்பட்ட புகைப்படங்களில், விஜய் வழக்கமான வெள்ளைத் துண்டால் மூடப்பட்ட நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

ஆனால், TAFE-இன் தலைவரும் நிர்வாக இயக்குநருமான மல்லிகா சீனிவாசன் மற்றும் துணைத் தலைவர் டாக்டர் லட்சுமி வேணு ஆகியோருடன் விஜய் நடத்திய சந்திப்பின் போது இன்று (15-ஆம் தேதி) வெளியிடப்பட்ட புகைப்படங்களில், முதலமைச்சரின் நாற்காலியில் அந்தத் துண்டு இல்லாமல் இருந்தது.
இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து லிசிப்ரியா கங்குஜம், முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்து, தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது; ''சாமானிய மக்களின் குரல்களை நீங்கள் (முதலமைச்சர் விஜய்) செவிமடுக்கிறீர்கள் என்பதை உங்கள் செயல் நிரூபிக்கிறது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், மாற்றம் வரப்போகிறது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Chief Minister Vijay Heeds the Request from a Young Social Activist in Manipur