மேகதாது அணை விவகாரம் குறித்து முதல்வர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம்...! ஒருமனதாக நிறைவேறுகிறதா...? சட்டசபையில் நடப்பது என்ன...?
Chief Minister Joseph Vijay separate resolution Mekedatu Dam issue Isbeing passed unanimously What happening assembly
தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த அரசினர் தனித்தீர்மானத்தை முன்வைத்து விரிவாக உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது,"காவிரி நடுவர் மன்றம் 05-02-2007 அன்று வழங்கிய இறுதி உத்தரவும், உச்சநீதிமன்றம் 16-02-2018 அன்று வழங்கிய தீர்ப்பும் முழுமையாக அமலில் உள்ள நிலையில், அவற்றை மதிக்காமல் கர்நாடக அரசு தன்னிச்சையான முறையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை அமைக்க முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.

மேலும், சம்பந்தப்பட்ட காவிரி படுகை மாநிலங்களின் ஒப்புதலையும் பெறாமல், மத்திய அரசின் அங்கீகாரமின்றியும் இத்திட்டத்தை முன்னெடுப்பது சட்டரீதியாகவும், நியாயரீதியாகவும் முறையற்றதாகும். எனவே கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக சட்டப்பேரவை தனது கடுமையான எதிர்ப்பை வலியுறுத்தி தெரிவிக்கப்படுகிறது.
மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என்று மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் காவிரி படுகையை நீர் பற்றாக்குறை நிலவுகின்ற ஆற்றுப்படுகையாக தெளிவாக குறிப்பிட்டுள்ளன.
கிடைக்கக்கூடிய மொத்த நீரும் ஏற்கனவே படுகை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதால், புதிய அணைகள் அமைப்பதற்கோ அல்லது கூடுதல் நீரை பயன்படுத்துவதற்கோ வாய்ப்பு இல்லை.காவிரி பிரச்சினை என்பது தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில மக்களின் உணர்வுகளுடன் நேரடியாக பின்னிப்பிணைந்த மிக முக்கியமான பிரச்சினையாகும்.
எனவே, மேகதாது அல்லது காவிரிப்படுகையின் வேறு எந்த பகுதிகளிலும் புதிய அணை அல்லது நீர்த்தேக்கத் திட்டங்களை, பிற மாநிலங்களின் இசைவு மற்றும் மத்திய அரசின் ஒப்புதல் இன்றி செயல்படுத்தக்கூடாது என்று கர்நாடக அரசுக்கு அறிவுறுத்துமாறு மத்திய அரசை இப்பேரவை கேட்டுக்கொள்கிறது.
மேலும், கர்நாடக அரசு சமர்ப்பிக்கும் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவோ, அனுமதி வழங்கவோ கூடாது என்று மத்திய நீர்வள ஆணையத்தையும் இப்பேரவை வலியுறுத்துகிறது.
கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகளின் உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை முழுமையான ஆதரவை ஒருமனதாக தெரிவிக்கப்படுகிறது .
இவ்வாறு முதலமைச்சர் உரையாற்றினார்.இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்மொழிந்த இந்த தனித்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.இறுதியாக, மேகதாது அணைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட அரசினர் தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
English Summary
Chief Minister Joseph Vijay separate resolution Mekedatu Dam issue Isbeing passed unanimously What happening assembly