'ஒரு பொதுமகன் நீதிமன்றத்தை அணுக முடியாத தூரத்தில் இருந்தால், அது உண்மையில் நீதியை மறுப்பதற்கு சமமானது'; மதுரை நீதிமன்ற கட்டிட திறப்பு விழாவில் தலைமை நீதிபதி பேச்சு..!
Chief Justice Speaks at the Inauguration of the Madurai Court Building
மதுரை - மேலூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக கூடுதல் நீதிமன்றங்கள் கட்ட ரூ.166 கோடி நிதி ஒதுக்கி, இதற்கான அடிக்கல் நாட்டு விழா 2023, மார்ச் 25-இல் நடந்தது. அதன்படி, 31,488 சதுர அடியில் 19 நீதிமன்ற அறைகளுடன் 03 மாடி நீதிமன்றக் கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே இங்கு முதன்மை மாவட்ட நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம், மகளிர் நீதிமன்றம் உள்ளிட்ட 13 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
புதிதாக கட்டப்பட்டுள்ள நீதிமன்ற கட்டிடத்தில் தரைத்தளத்தில் வாகனம் நிறுத்தவும், மேல் 03 மாடியில் நீதிமன்ற அறைகள், அலுவலகம், கைதிகள் காத்திருப்பு அறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து நேற்று திறப்பு விழா நடைபெற்றது. இந்த புதிய கட்டிடங்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் திறந்து வைத்து உரையாற்றினார்.
அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது, ஒரு பொதுமகன் நீதிமன்றத்தை அணுக முடியாத தூரத்தில் இருந்தால், அது உண்மையில் நீதியை மறுப்பதற்கு சமமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பெரும்பாலான பொதுமக்களுக்கு முதலும் கடைசியுமானது நீதிமன்றம் தான். உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் சட்டத்தை வடிவமைத்தாலும், அதன் உயிரோட்டத்தை வழங்குவது மாவட்ட நீதித்துறையே என்று குறிப்பிட்டுள்ளதோடு, நீதிமன்ற கட்டமைப்பில் முதலீடு செய்வது, வெறும் கட்டிடங்களை அமைப்பதற்காக அல்ல. அது விரைவான, மரியாதையான மற்றும் செயல்திறன் மிக்க நீதிநிர்வாகத்தை உருவாக்குவதற்கான அடித்தளமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நீதிமன்றம் ஒழுங்கையும் திறமையையும் மேம்படுத்தி, நீதித்துறையின் கண்ணியத்தை உயர்த்தும் என்று தெரிவித்துள்ளார். இந்த புதிய கட்டிடங்கள் தற்போதைய வசதிகளின் மீதுள்ள அழுத்தத்தை குறைத்து, தேவையற்ற வழக்கு ஒத்திவைப்புகளை தவிர்க்க உதவும் வேண்டும் கூறியுள்ளார்.
இதன் மூலம் பொதுமக்களின் நீதித்துறையின் மீதுள்ள நம்பிக்கை மேலும் வலுப்பெறும் என்றும், சென்னை உயர்நீதிமன்றம், குறிப்பாக மதுரை கிளை, சிவில், குற்றவியல் மற்றும் அரசியலமைப்பு சட்டங்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கி முன்னணியில் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
அதேப்போன்று நீதிபதிகளின் அர்ப்பணிப்பும், வழக்கறிஞர்களின் தொழில்முறை திறனும் இணைந்தாலே உயர்தரமான நீதி வழங்க முடியும் என்று குறித்த விழாவில் தலைமை நீதிபதி பேசியுள்ளார்.
English Summary
Chief Justice Speaks at the Inauguration of the Madurai Court Building