சென்சார் சிக்கல் முடிந்ததா? ‘ஜனநாயகன்’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் என தகவல்... ரிலீஸ் தேதியில் புதிய ட்விஸ்ட்!
Has the Censor issue been resolved Reports suggest an A certificate for the movie Jananayagan A new twist regarding the release date
விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதமே வெளியாக வேண்டியது. ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. பல மாதங்களாக நீடித்து வந்த இழுபறிக்குப் பிறகு, தற்போது படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ரிலீஸ் பணிகள் மீண்டும் பரபரப்பாக தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த பிறகு நடித்த திரைப்படம் ‘ஜனநாயகன்’. மேலும், இதுவே தனது கடைசி படமாக இருக்கும் என்றும் அவர் அறிவித்திருந்தார். இதனால் படத்தின் ரிலீஸை ஒரு பண்டிகையைப் போல் கொண்டாட ரசிகர்கள் தயாராக இருந்தனர். ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம், ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக படக்குழு நீதிமன்றத்தையும் நாடியது. ஆனால் அங்கும் சாதகமான முடிவு கிடைக்காததால், வழக்கை வாபஸ் பெற்ற தயாரிப்பு நிறுவனம் படத்தை மீண்டும் தணிக்கைக்கு அனுப்பியதாக கூறப்பட்டது.
இதற்கிடையே, சில மாதங்களுக்கு முன்பு முழுப் படமும் இணையத்தில் லீக்கானதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. ஆரம்பத்தில் படத்தின் எடிட்டர் மீது சந்தேகம் எழுந்தது. ஆனால் அவருக்கும் படம் லீக்கானதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது பின்னர் உறுதியானதாக கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
படம் மறுதணிக்கைக்கு அனுப்பப்பட்ட பிறகும் அதிகாரிகள் அதைப் பார்ப்பதில் தாமதம் செய்ததாக கூறப்பட்டது. இதனால் ‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸ் இனி சாத்தியமா என்ற சந்தேகமே ஒரு கட்டத்தில் எழுந்தது.
இந்த நிலையில், விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தை இன்று பார்த்த தணிக்கை அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
படத்துக்கு சான்றிதழ் கிடைத்துவிட்டதாக தகவல் பரவியுள்ள நிலையில், தற்போது அனைவரது கவனமும் ரிலீஸ் தேதியின் மீது திரும்பியுள்ளது. இந்த மாதத்துக்குள்ளேயே படத்தை திரைக்கு கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், படத்தின் டைட்டில் கார்டில் ‘தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்’ என்ற வாசகத்தை இடம்பெறச் செய்வதற்கு முதலமைச்சர் தரப்பிலிருந்து கிரீன் சிக்னல் கிடைத்துவிட்டதாகவும் தகவல் பரவி வருகிறது. அப்படி ஒரு டைட்டில் கார்டு திரையில் தோன்றினால், விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம் உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தேதி தொடர்பாக மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. ஜூலை 24ஆம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் படத்தின் ஓடிடி உரிமையை பெற்றுள்ள நிறுவனம், ஜூலை 16ஆம் தேதியே படத்தை திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்று விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவ்வாறு ஜூலை 16ஆம் தேதி படம் வெளியானால், சரியாக ஒரு மாதம் கழித்து ஆகஸ்ட் 15ஆம் தேதி ஓடிடியில் வெளியிட முடியும் என்பது அந்த நிறுவனத்தின் திட்டம் என கூறப்படுகிறது. இதனால் ஜூலை 16 அல்லது ஜூலை 24 ஆகிய இரண்டு தேதிகளில் எதை தேர்வு செய்வது என்பது குறித்து படக்குழு ஆலோசித்து வருவதாக வலைப்பேச்சு டீம் தெரிவித்துள்ளது.
பல மாதங்களாக தடைகளை சந்தித்து வரும் ‘ஜனநாயகன்’, இறுதியாக திரைக்கு வருவதற்கான சூழல் உருவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவதால் விஜய் ரசிகர்கள் மீண்டும் உற்சாகமடைந்துள்ளனர். அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்பதே தற்போது கோலிவுட்டின் முக்கிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
English Summary
Has the Censor issue been resolved Reports suggest an A certificate for the movie Jananayagan A new twist regarding the release date