பிரேக்கிங் நியூஸ்...! அண்ணாமலையின் அதிரடி முடிவு...பாஜகவில் இருந்து திடீரென விலகியது ஏன்...? பின்னணி என்ன...?
Breaking news Annamalai dramatic decision Why did he suddenly leave BJP What background
கர்நாடகாவில் இளம் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றியபோதே தனது துணிச்சலான செயல்பாடுகளால் கவனம் பெற்ற அண்ணாமலை, அந்தப் பொறுப்பை துறந்து 2020-ஆம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார். நேரடியான பேச்சு, தீவிர அரசியல் அணுகுமுறை மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் திறன் ஆகியவற்றால் குறுகிய காலத்திலேயே தமிழக பா.ஜ.க.வின் முக்கிய முகமாக உயர்ந்தார். பின்னர் மாநிலத் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
அவரது தலைமையில் நடைபெற்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் கணிசமாக உயர்ந்தது. ஆனால் அதனைத் தொடர்ந்து எதிர்பாராத வகையில் 2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அவர் மாற்றப்பட்டார். இந்த மாற்றத்துக்கு கூட்டணி அரசியலின் அழுத்தங்களே காரணம் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரவலாக எழுந்தது.

சட்டசபைத் தேர்தலில் நேரடியாக களமிறங்க அண்ணாமலை விருப்பம் தெரிவித்திருந்ததாகவும், கோவை வடக்கு அல்லது திருப்பூர் வடக்கு தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது அவரது ஆதரவாளர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக தேர்தல் பரப்புரையிலும் அவர் முழு உற்சாகத்துடன் ஈடுபடவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. தேர்தல் முடிவில், கூட்டணியில் போட்டியிட்ட பா.ஜ.க. மிகக் குறைந்த வெற்றியையே பதிவு செய்ததுடன், வாக்கு சதவீதமும் கடுமையாக சரிந்தது.இந்த சூழலில், அண்ணாமலை தனித்த அரசியல் பாதையை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அவரது ஆதரவாளர்கள் மத்தியில் வலுப்பெற்றது.
எனினும், அதுகுறித்து அவர் எந்தவித வெளிப்படையான கருத்தையும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார்.அரசியல் பரபரப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், மும்மொழிக் கொள்கை தொடர்பாக பா.ஜ.க.வின் நிலைப்பாட்டுக்கு எதிராக அண்ணாமலை வெளியிட்ட கருத்துகள் கட்சிக்குள் புதிய விவாதங்களை உருவாக்கின. இதையடுத்து, அவர் கட்சியிலிருந்து விலகக்கூடும் என்ற தகவல்கள் அரசியல் அரங்கில் தீவிரமாக பேசப்பட்டன.
இந்த நிலையில், டெல்லி பயணத்திற்காக சென்னை விமான நிலையம் வந்த அண்ணாமலை, வழக்கமாக பயன்படுத்தப்படும் கட்சி அடையாளங்கள் இல்லாத வாகனத்தில் வந்தது புதிய ஊகங்களுக்கு வழிவகுத்தது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "இன்னும் இரண்டு நாட்களில் அனைத்து கேள்விகளுக்கும் விரிவான பதில் அளிக்கிறேன்" என்று மட்டும் கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபினை அண்ணாமலை சந்தித்ததாகவும், தமிழக அரசியல் நிலவரம், கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும் அவர் சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கட்சியின் எதிர்கால செயல்திட்டம் மற்றும் தனது அரசியல் பயணம் தொடர்பாக அப்போது விரிவாக பேசியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, கட்சியிலிருந்து விலகும் விருப்பத்தை அண்ணாமலை தலைமைக்கு எடுத்துரைத்ததாகவும், இனி தனது சொந்த அரசியல் பாதையில் பயணிக்க விரும்புவதாக தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், அவரை தொடர்ந்து கட்சியில் தக்கவைக்க பா.ஜ.க. தலைமை தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், தேசிய அளவிலான முக்கிய பொறுப்பு ஒன்றை வழங்குவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அண்ணாமலையின் அடுத்த அரசியல் அறிவிப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவரது ஒவ்வொரு நகர்வும் தேசிய மற்றும் மாநில அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
English Summary
Breaking news Annamalai dramatic decision Why did he suddenly leave BJP What background