பாஜக தேசிய மகளிரணி செயலாளர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில், "வாஜ்பாய், பிரதமர் மோடி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியுள்ள. பொருளாதாரத்தில் மகாராஷ்டிரத்தை முந்துவதே தமிழ்நாட்டின் இலக்காக இருக்க வேண்டும்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 19-ம் தேதி, திமுக அரசின் 2025-2026-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில், பாஜக சார்பில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. நான் பேசும்போது, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள் அடிக்கடி குறுக்கிட்டனர்.
சட்டப்பேரவை பாஜக உறுப்பினர் என்ற முறையிலும், கோவை தெற்கு தொகுதி உறுப்பினர் என்ற முறையிலும் எனது கேள்வி, எனது கருத்துகளை திசைதிருப்பி மத்திய அரசு மீது வீண்பழி சுமத்தும் வகையிலேயே அமைச்சர்களின் பதில்கள் அமைந்திருந்தன. அதற்குப் பதிலளிக்கும் வாய்ப்பு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எனக்கு வழங்கப்படவில்லை. அதனால், சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன்.
பாஜக மகளிரணி தேசியத் தலைவர் என்ற முறையில் நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன்பிரதேசங்களுக்கும் பயணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த அனுபவங்களை, 'என் தேசம், ஒரே தேசம்' என்ற தலைப்பில் புத்தகமாகவும் எழுதியிருக்கிறேன். அதை, 'கிழக்கு பதிப்பகம்' வெளியிட்டுள்ளது. இப்படி மற்ற மாநிலங்களைப் பார்க்கும்போது, தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், இந்த வளர்ச்சியில் ராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா என தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுக்கு பங்கு இருக்கிறது என்று குறிப்பிட்டேன்.
ஆனால், அதை திசைதிருப்பிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, "தமிழ்நாட்டின் வளர்ச்சியில் பாஜகவுக்கு பங்கு இல்லை. இந்த களத்தில் நீங்கள் இல்லை. வெளியேபோய் விளையாடுங்கள்" என்றார். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியில் இருந்தது இல்லை என்பதால் மற்ற தலைவர்களை குறிப்பிட்டேனே தவிர, தமிழ்நாட்டின் வளர்ச்சியில் பாஜகவுக்கு பெரும் பங்கு இருக்கிறது.
1998 முதல் 2004 வரை வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியிலும், 2014 முதல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியிலும் தமிழ்நாட்டில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. வாஜ்பாயின் தங்க நாற்கரச்சாலை திட்டம், மேம்பாலங்கள், நெடுஞ்சாலகள், விமான நிலைய விரிவாக்கம், புதிய ரயில்கள், புதிய ரயில் திட்டங்கள், துறைமுக மேம்பாடு, புதிய மருத்துவக் கல்லூரிகள், பாதுகாப்பு தொழில்வழித்தட திட்டம், எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை இல்லாமல் தமிழ்நாட்டின் வளர்ச்சி எப்படி சாத்தியமாகியிருக்க முடியும்?
பி.எம்.ஸ்ரீ திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தாததால்தான் அதற்கான நிதியை மத்திய அரசால் வழங்க முடியவில்லை. மற்றபடி, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்விக்கான நிதி உட்பட எந்த நிதியையும் மோடி அரசு நிறுத்தவில்லை.
மாநிலங்களுக்கு நிதி வழங்க, திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு எந்த வழிமுறையைப் பின்பற்றியதோ, அதே வழிமுறையின்படி இப்போதும் மோடி அரசு மாநிலங்களுக்கு நிதி வழங்கி வருகிறது. நிதிக்குழு பரிந்துரையின்படி, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியில், ஒரு ரூபாய் கூட பாக்கி வைக்காமல் மோடி அரசு கொடுத்து வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்கள், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என எந்த பாகுபாட்டையும் மோடி அரசு பார்ப்பதில்லை.
மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு வழங்கும் முறையில் திமுகவுக்கு உடன்பாடு இல்லை என்றால், நியாயமற்றது என கருதினால், 15 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்தபோது , திமுக மாற்றியிருக்கலாம். ஆனால், அப்போது மெளனமாக இருந்து விட்டு, இப்போது உத்தரப்பிரதேசம், பீஹாருக்கு அதிகம் நிதி கொடுக்கிறார்கள் என குற்றம்சாட்டுவதில் எந்த நேர்மையும் இல்லை. திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உத்தரப்பிரதேசம், பீஹாருக்கு எவ்வளவு சதவீதம் நிதி வழங்கப்பட்டதோ, அதே சதவீதம்தான் இப்போதும் வழங்கப்படுகிறது.
எதற்கெடுத்தாலும் இந்தியாவிலேயே வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்களுடன் ஒப்பிட்டு திமுகவினர் பெருமை பேசுகிறார்கள். தமிழ்நாட்டைப் போலவே, கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலுங்கானா, மகாராஷ்டிரம், கோவா, ஹரியானா, போன்ற மாநிலங்களும் வளர்ந்த மாநிலங்கள்தான்.
நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக, மகாராஷ்டிரத்திற்கு அடுத்து நம் தமிழ்நாடு இருப்பது தமிழச்சியாக எனக்கு பெருமை அளிக்கும் விஷயம். ஆனால், கர்நாடகம், குஜராத் ஆகியவை, தமிழ்நாட்டின் இரண்டாம் இடத்தை தொட்டுவிடும் இடத்தில்தான் உள்ளன. இப்போது பாஜக ஆட்சியில் வேகமாக வளர்ந்து வரும் உத்தரப்பிரதேசமும் இந்த மாநிலங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இவற்றை கவனத்தில் கொண்டு மகாராஷ்டிரத்தை விஞ்ச தமிழ்நாடு திட்டமிட வேண்டுமே தவிர, பின்தங்கி மாநிலங்களுடன் ஒப்பிட்டுக் கொண்டிருக்க கூடாது. பொருளாதாரத்தில் மகாராஷ்டிர மாநிலத்தை முந்துவதே, தமிழ்நாட்டின் இலக்காக இருக்க வேண்டும்
உத்தரப்பிரதேசம், பீஹார் போன்ற மாநிலங்கள் வளர்ச்சியில் பின்தங்கியதற்கு திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸே காரணம். 55 ஆண்டுகள் இந்தியாவையும், இந்த மாநிலத்தையும் ஆண்ட காங்கிரஸ் தான் இந்த பின்னடைவுக்கு காரணம். அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, அந்த மாநிலங்களை, அந்த மாநில மக்களை திமுக அவமதித்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த தவறுக்கு மக்கள் எப்படி பொறுப்பாக முடியும்?
எனவே, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி போன்ற இண்டி கூட்டணி கட்சிகளின் ஆட்சியால் வளர்ச்சியில் பின்னுக்கு தள்ளப்பட்ட மாநிலங்களோடு, தமிழ்நாட்டை ஒப்பிடுவதை நிறுத்திக் கொண்டு, ராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோர் ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சியை தக்க வைக்கவும், அதைத் தொடரவும், ஊழலற்ற ஆட்சியை நடத்தவும் திமுக அரசு முன்வர வேண்டும்.
மாறாக மத்திய அரசு மீது வீண்பழி சுமத்தி, மொழி பிரச்னையை கிளப்பி காலத்தை ஓட்டி விடலாம் என நினைத்தால் திமுகவுக்கு ஏமாற்றமே மிஞ்சும்" என்று தெரிவித்துள்ளார்.