அராஜகம் செய்யாதீங்க... அடுத்த முறை எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் கிடைக்காது - ராகுல்காந்தியை எச்சரித்த வானதி சீனிவாசன்!
bjp mla vanathi condemn to congress rahul gandhi
பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "மக்களால் புறக்கணிக்கப்பட்ட ராகுல்கந்தி நாடாளுமன்றத்தில் அராஜகத்தில் ஈடுபடுகிறார். அரசியல் நடத்த ஆயிரம் விஷயங்கள் இருக்கும்போது நாட்டின் பாதுகாப்பை அரசியலாக்கினால் அடுத்த முறை எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் கிடைக்காது.
சுதந்திரத்திற்குப் பிறகு 55 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கரஸ் கட்சியை, தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய மக்கள் புறக்கணித்துள்ளனர். கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் 99 இடங்களில் வென்ற காங்கிரஸ், ஏதோ ஆட்சியைப் பிடித்து விட்டது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியது.
ஆனால், அதன்பிறகு கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற ஹரியாணா, டில்லி, ஜம்மு - காஷ்மீர், மகாராஷ்டிரா, பீகார் சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. கடைசியாக நடைபெற்ற மகாராஷ்டிர மாநில உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் இருந்த இடம் தெரியாத அளவுக்கு தோல்வி அடைந்தது.
இப்படி தொடர்ந்து மக்களால் புறக்கணிக்கப்பட்டு வரும் காங்கிரஸ் கட்சி, இனி தேர்தல்களில் வெற்றி பெறவே முடியாத என்ற முடிவுக்கு வந்து விட்டது. அதனால்தான், தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அராஜகங்களில் ஈடுபட்டு வருகிறது. நாடாளுமன்றத்தை கேளிக்கை விடுதியாக மாற்ற ராகுல் காந்தி நினைக்கிறார். அவர் அணிந்து வரும் ஆடை, நடவடிக்கைகள் அதை உறுதிப்படுத்துகின்றன.மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி, இன்னும் வெளிவராத புத்தகத்தில் இருப்பதாகக் கூறி, நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என கூறி வருகிறார்.
"ராணுவ அமைச்சருக்கும், பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையே நடந்த உரையாடல்கள், பிரதமர் - ராணுவ அமைச்சர் இடையிலான ரகசிய நடவடிக்கைகள் நாட்டின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்ய முடியும்?” என, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு அவர்கள் எடுத்துக் கூறியும் ராகுல் காந்தி வேண்டுமென்றே நாட்டின் பாதுகாப்பை வைத்து அரசியல் நடத்தி வருகிறார்.நாடாளுமன்றத்தில் சீக்கிய மதத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சரை துரோகி எனக் கூறி கைகொடுப்பது, 'ஒன்றாக பேட்டி கொடுப்போம் வாருங்கள்' என, கையை பிடித்து இழுப்பது என்றெல்லாம் நாடாளுமன்றத்தின் மகத்துவத்தை ராகுல் காந்தி சீர்குலைத்து வருகிறார். இந்தியாவும், இந்திய நாடாளுமன்றமும் தங்களின் குடும்பச் சொத்து, நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், யாரையும் சீண்டலாம் என அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார்.
அதிகாரம் இல்லாமல் ராகுல் காந்தியால் இருக்க முடியவில்லை. நான் ஆளப் பிறந்தவன் என்ற மனநிலையில், மமதையில் ராகுல் காந்தி இருக்கிறார். அதனால்தான், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில், ஏழை குடும்பத்தில் பிறந்த நரேந்திரமோடி அவர்கள் பிரதமராக இருப்பதை ராகுல் காந்தியாலும், அவரது குடும்பத்தினராலும் சகித்துக் கொள்ள முடியவில்லை.
அதனால்தான், நாடாளுமன்றத்தில் பிரதமரின் இருக்கையை சுற்றிலும் பெண் எம்.பி.க்களை நிறுத்தி, அவரை அவமானப்படுத்த திட்டமிட்டனர். இறையருளால் அந்த சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது.அரசியல் நடத்துவதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. அதை விடுத்து நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் அரசியல் செய்வதை ராகுல் காந்தி நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இல்லையெனில், அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மக்கள் அவருக்கு வழங்க மாட்டார்கள். இதை உணர்ந்து ஆக்கப்பூர்வமான அரசியலில் ராகுல் காந்தி ஈடுபட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
bjp mla vanathi condemn to congress rahul gandhi