பிகார் துணை முதல்வர் கார் மீது செருப்பு வீச்சு.. ஆர்ஜேடி ஆதரவாளர்கள் தாக்குதல்!
Bihar Deputy Chief Ministers car Attack
பிகார் துணை முதல்வர் மற்றும் பாஜக தலைவரான விஜய் குமார் சின்ஹா சென்ற காரின் மீது ராஷ்ட்ரீய ஜனதா தள (ஆர்ஜேடி) ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில், லக்கிசராய் தொகுதியில் விஜய் குமார் சின்ஹா போட்டியிடுகிறார். வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், காலை முதலே அவர் தனது தொகுதிக்குள் உள்ள வாக்குச்சாவடிகளை நேரில் ஆய்வு செய்து வந்தார்.
இந்த நேரத்தில், கோரியாரி கிராமத்துக்குச் சென்றபோது, ஆர்ஜேடி ஆதரவாளர்கள் அவரை ஊருக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து மாட்டுச்சாணம், கற்கள், காலணிகளை அவரின் காரின் மீது எறிந்து தாக்கினர். இதனுடன் “வெளியேறு” என கோஷங்கள் எழுப்பியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
தொடர்ந்த குழப்பத்தின் காரணமாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து, விஜய் குமார் சின்ஹா காவல் கண்காணிப்பாளரைத் தொடர்புகொண்டு கூடுதல் பாதுகாப்பு படையினரை அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். மேலும், “இந்த ஆர்ஜேடி ஆதரவாளர்கள் ஏற்கனவே என் வாக்குச்சாவடி முகவர்களை மிரட்டி, காலை 6.30 மணிக்கே அங்கிருந்து அனுப்பிவிட்டனர். வாக்காளர்களை வாக்கு செலுத்த விடாமல் தடுக்கின்றனர். ஆட்சியில் இல்லாதபோதே இவ்வளவு அட்டூழியம் நடக்கிறது என்றால் ஆட்சியில் இருந்தால் என்ன செய்வார்கள் என சிந்தியுங்கள்” எனக் கூறினார்.
English Summary
Bihar Deputy Chief Ministers car Attack