பொங்கலுக்குள் பெரிய தலைவர்கள் தவெகவில் இணைவார்கள்.. யாரை சொல்கிறார் செங்கோட்டையன்? - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் வரும் நாட்களில் அரசியல் ரீதியாக முக்கியமான இணைவுகள் நடைபெறும் என அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை வருவதற்குள் பெரிய தலைவர்கள் தவெகவில் இணைவார்கள் என்றும், தவெக தலைவர் விஜய்யை முதல்வராக ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களை கூட்டணியில் வரவேற்போம் என்றும் அவர் கூறினார்.

நேற்று ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அணியின் தீவிர ஆதரவாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர், தவெக தலைவர் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். இதற்கு 10 நாட்களுக்கு முன்பு அவரது மகனும் தவெகவில் இணைந்திருந்த நிலையில், தற்போது தந்தையும் இணைந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ் அணியில் இருந்து மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த இணைவுகளின் பின்னணியில் செங்கோட்டையன் முக்கிய பங்கு வகித்து வருகிறார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் இணைந்து அரசியல் பயணம் மேற்கொண்ட செங்கோட்டையன், பின்னர் அதிருப்தியாளர்களை அணுகி தவெக பக்கம் இழுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஈரோடு – கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தவெக அலுவலகத்தில் வேலு நாச்சியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த செங்கோட்டையன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
“தவெக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உலக அளவில் சிறந்த தலைவர்களில் ஒருவராக தவெக தலைவர் விஜய் உள்ளார். மக்களால், மக்களுக்கு நல்லாட்சியை வழங்குவார். மக்கள் மாற்றங்களை விரும்புவதால் தான் நாங்கள் கடுமையாக உழைக்கிறோம்” என்றார்.

மேலும், தவெக சார்பில் விருப்ப மனு வழங்குவது தொடர்பான முடிவை விஜய் தான் எடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார். ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி அவற்றை நிறைவேற்றாததால் போராட்டங்கள் நடைபெறுகின்றன என்றும், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஒரே நேரத்தில் விமர்சிக்கும் ஒரே கட்சி தவெக தான் என்றும் அவர் கூறினார்.

“இரு கட்சிகளும் தவெகவை தாக்குகின்றன. காய்ந்த மரத்தில் தான் கல்லடி படும். பொங்கல் வருவதற்குள் பெரிய தலைவர்கள் தவெகவில் இணைவார்கள். விஜய்யை முதல்வராக ஏற்றுக் கொள்ளும் அனைவரையும் கூட்டணியில் வாழ்த்தி வரவேற்போம். விரைவில் யார் யாருடன் கூட்டணி அமைக்கிறார்கள் என்பதை மக்கள் பார்ப்பார்கள். ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது” என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து தவெக அரசியல் களத்தில் அடுத்த கட்ட நகர்வுக்கு தயாராகி வருவதை வெளிப்படுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Big leaders will join the Tvk during Pongal Who is Sengottaiyan talking about


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->