குப்பை குவியல் தாண்டி கோபம் குவியல்...! அதிமுகவின் மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...!
Beyond pile garbage there pile anger AIADMK announces grand protest
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட கடும் கண்டன அறிக்கையில், திருப்பூர் மாநகராட்சியில் அதிமுக ஆட்சிக்காலத்தில் சிறப்பாக செயல்பட்ட 25 நுண் உரமாக்கல் மையங்களும் 3 உலர் கழிவு மீட்பு மையங்களும் தற்போதைய நிர்வாகத்தால் மூடப்பட்டதால், ஒவ்வொரு வார்டிலும் டன் கணக்கில் குப்பைகள் குவிந்து ‘டாலர் சிட்டி’ என்ற பெயர் ‘குப்பை நகரம்’ என மாறும் சூழல் உருவாகிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

இதனால் பரவும் சுகாதார சீர்கேடு, நோய்த் தொற்று அபாயத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கண்டித்துள்ளார்.இதற்கிடையில், குப்பை வரியை 150% உயர்த்தி, தரம் பிரித்து குப்பை அளிக்காத வீடுகளுக்கு ரூ.50 அபராதம் விதிப்பதாக மிரட்டும் திருப்பூர் மாநகராட்சி நடவடிக்கையையும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார். அதேசமயம், தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை முறையாக செய்யாத மாவட்ட நிர்வாகத்தையும், இதனை கண்மூடி அனுமதிக்கும் திமுக அரசையும் அவர் கண்டித்துள்ளார்.
இதனை எதிர்த்து, அதிமுக திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகம் சார்பில் வரும் 25-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு திருப்பூர் குமரன் சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.இந்த ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெறவுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., கழக அமைப்புச் செயலாளர் திருப்பூர் சி. சிவசாமி முன்னாள் எம்.பி., கே.என். விஜயகுமார் எம்.எல்.ஏ., எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அன்பகம் திருப்பதி உள்ளிட்ட பலர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
கழக நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் திரளாகக் கலந்து கொள்ளுமாறு அதிமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Beyond pile garbage there pile anger AIADMK announces grand protest