தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்; நீதிமன்றக் காவலில் சிறையில் 03 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி..!
Bail applications of 3 people in judicial custody in the horse trading case with TVK MLA rejected
தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 03 பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்படி, நரேஷ், ரமேஷ், கார்த்திக், திருநாவுக்கரசு உட்பட 09 பேரை சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் மீதும் குதிரை பேரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்நிலையில், கைதாகி தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ள நரேஷ், ரமேஷ், கார்த்திக் ஆகிய 03 பேரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதாவது, ''இந்த வழக்குக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்'' என மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸார் தரப்பில், 'இந்த வழக்கு ஆரம்பகட்டத்தில் உள்ளது. இந்த வழக்கில் இன்னும் பலருக்கு தொடர்புள்ளது. ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரித்துள்ள நிலையில், மனுதாரர்கள் 03 பேருக்கும் ஜாமீன் வழங்கினால், புலன் விசாரணை பாதிக்கப்படும்' என்று வாதிடப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குறித்த 03 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Bail applications of 3 people in judicial custody in the horse trading case with TVK MLA rejected