தவெகவில் அருண்ராஜ்–புஸ்ஸி ஆனந்த் மோதல்! பாண்டியில் வேலையை காட்டிய புஸ்ஸி! விஜய்க்கு முளைத்த புது தலைவலி!
Arunraj Pussy Anand clash in Tvk Pussy showed off her work in Pandi Vijay has a new headache
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் மாநில நிர்வாகிகள் இடையே உள்ள உட்கட்சி முரண்பாடுகள் வெளிப்படையாக வெடிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்ஸி ஆனந்த் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், தற்போது கட்சியில் சமீபத்தில் இணைந்த அருண்ராஜ் மற்றும் புஸ்ஸி ஆனந்த் இடையே ஏற்பட்ட மோதல் விஜய்க்கு புதிய தலைவலியாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
கட்சி தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே நிர்வாக அதிகாரம், முடிவெடுக்கும் முறை, தலைமை அணுகல் உள்ளிட்ட விவகாரங்களில் அதிருப்தி அதிகரித்து வருகிறது. நடிகர் விஜயை நேரடியாக சந்திக்க முடியாத நிலை இருப்பதாக மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் கட்சிக்குள் எழும் புகார்கள், பிரச்சனைகள் தலைமைக்கு செல்வதில்லை என்ற ஆதங்கமும் நிலவுகிறது. இந்த சூழலில் விஜய்க்கு அடுத்த முக்கிய அதிகார மையமாக புஸ்ஸி ஆனந்த் செயல்படுவதாகவும், அவரைத் தாண்டி விஜயை அணுக முடியாது என்ற கருத்தும் கட்சிக்குள் பரவி வருகிறது.
முன்னதாக நடிகர் தாடி பாலாஜி, புஸ்ஸி ஆனந்த் தான் விஜயுக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே தடையாக இருப்பதாக வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் அந்த விவகாரத்தில் விஜய் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே கொள்கை பரப்பு பொதுச்செயலாளராக உள்ள அருண்ராஜ், சமீப காலமாக புஸ்ஸி ஆனந்தை மீறி நேரடியாக விஜயை சந்தித்து பேசி வருவதாக கூறப்படுகிறது. இதுவே இருவருக்கும் இடையேயான பனிப்போருக்கு காரணம் என தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோதலின் உச்சமாக, புதுச்சேரியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் ஒரு சம்பவம் நடந்ததாக பேசப்படுகிறது. அந்த கூட்டத்திற்கு போலீசார் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளித்த நிலையில், QR கோடு அடிப்படையிலான பாஸுடன் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அப்போது அருண்ராஜ் எந்த பாஸும் எடுத்துச் செல்லாததால், போலீசார் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர் புஸ்ஸி ஆனந்துக்கு பலமுறை போன் செய்தும், ஆனந்த் திட்டமிட்டு அழைப்பை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
“விஜயுடன் தினமும் பேசும் எனக்கே இந்த நிலை என்றால், மற்ற நிர்வாகிகளின் நிலை என்ன?” என அருண்ராஜ் புலம்பியதாகவும், இதை அவர் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வெளிப்படையாக கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், தவெகவில் உட்கட்சி பனிப்போர் நாளுக்கு நாள் தீவிரமாகி வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Arunraj Pussy Anand clash in Tvk Pussy showed off her work in Pandi Vijay has a new headache