சாதிய மோதலுக்கு அடிபோட்ட திருமாவளவனின் குட்டு அம்பலம்.!  - Seithipunal
Seithipunal


பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், அரக்கோணம் இரட்டை கொலை விவகாரம் குறித்து நேற்று ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அவரின் அந்த அறிக்கையில், 

"உண்மைகள் உறங்கும் போது பொய்கள் கூத்தாடும் என்பதைப் போல அரக்கோணம் சோகனூர் இரட்டைக் கொலை தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி மீதும், வன்னியர் சமுதாயத்தின் மீதும் அவதூறுகள் அள்ளி வீசப்படுகின்றன. அடிப்படையற்ற அவதூறுகளை சில அரசியல்கட்சித் தலைவர்களும், ஊடக அறத்தை மதிக்காத சில ஊடகங்களும் ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும் கண்டிக்கத்தக்கவை ஆகும்.

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட காவேரிப்பாக்கம் ஒன்றியம் சோகனூர் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர். இத்தாக்குதல்கள் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை விசாரணையும் மிகவும் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், அரக்கோணம் படுகொலை விவகாரத்தில் உண்மைகள் அனைத்தையும் குழி தோண்டி புதைத்து விட்ட சில சக்திகள், இந்த விஷயத்தில் வன்னியர்கள் மீதும், பா.ம.க. மீதும் அவதூறு பரப்பிக் கொண்டிருக்கின்றன. உண்மையின் அடிப்படையில் இந்த விஷயத்தை  எதிர்கொள்ள வேண்டிய திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் சாதியமும், தேர்தல் பகையும் தான்  இந்தப் படுகொலைகளுக்கு காரணம் பொய்ப் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தக் கட்சிகள் அரசியலுக்காக எதையும் செய்யக்கூடியவை என்பதற்கு இது தான் சிறந்த உதாரணமாகும்.

மனித உயிர்கள் விலைமதிப்பற்றவை. அரக்கோணத்தில் இருவர் கொல்லப்பட்டதும் கண்டிக்கத்தக்கவையே. அதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பா.ம.க.வின்  நிலைப்பாடும் இது தான்.  மாறாக தவிர்த்திருக்கப்பட வேண்டிய இந்த படுகொலைகளுக்கு சாதி சாயமும், அரசியல் சாயமும் பூசி அரசியல் லாபம் தேட முயல்வதும், முற்போக்கு சக்திகள் என்று கூறிக் கொள்ளும் கட்சிகள் அதற்கு துணை நிற்பதும் மலத்தில் அரிசி பொறுக்குவதை விட மோசமான செயல். இது அரசியல் நாகரிகமல்ல.

அரக்கோணம் அருகே இருவர் படுகொலை செய்யப்பட்டது உண்மை. அவர்கள் பட்டியலினத்தவர் என்பதும் உண்மை. இந்தப் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட சிலர் வன்னியர் என்பதும் உண்மை. ஆனால், இந்தக் கொலைகளுக்கான காரணம் சாதியோ, தேர்தலோ அரசியலோ இல்லை என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. கொலையானவர்களும், கொலை செய்யப்பட்டதாக கூறி கைது செய்யப்பட்டவர்களும் நீண்ட காலமாக நண்பர்களாக இருந்தவர்கள். கொலை நடப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு வரை அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் தான் இந்தக் கொலை நிகழ்வு நடந்திருக்கிறது. இது தான் மறுக்க முடியாத உண்மை.

இது குடிபோதையில் இருந்த இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதல். இதில் சாதி எங்கிருந்து வந்தது?

கொல்லப்பட்டவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அல்ல. கொலை செய்ததாக கூறப்படுபவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியினரும் அல்ல. இன்னும் கேட்டால் கொல்லப்பட்ட இருவரும் புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்த மோதலின் பின்னணியில் அரசியல் இல்லை என்றும் அந்தக் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி கூறியிருக்கிறார். அவ்வாறு இருக்கும் போது இதில் அரசியல் எங்கிருந்து வந்தது?

அரக்கோணம் கொலைகளை கண்டிக்கும் உரிமை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது. அது அவர்களின் கடமையும் கூட. ஆனால், அரசியல் காரணங்களாலும், சாதி வெறியாலும் தான் இந்தக் கொலைகள் நடந்ததாக அவதூறு பரப்பும் அதிகாரத்தை திமுக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு யார் கொடுத்தது? எந்த ஒரு விஷயம் குறித்தும் கருத்து தெரிவிப்பதற்கு முன்பாக அது குறித்து நன்றாக ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பது தான் அரசியலில் அடிப்படை ஆகும். மாறாக, பகுத்தறிவை அடகு வைத்து விட்டு ஒரு சமுதாயத்தின் மீது பழி சுமத்துவது அரசியல் தலைவர்களுக்கு அழகல்ல. யாரோ தெருவில் செல்பவர்கள் பழி சுமத்துவதைப் போல அரசியல் தலைவர்களும் பழி சுமத்தக் கூடாது; அதன் மூலம் அரசியலில் தங்களின் தரத்தை தாங்களே தாழ்த்திக் கொள்ளக் கூடாது.

அரக்கோணம் படுகொலை விவகாரத்தில் பல ஊடகங்கள் உண்மையை உள்ளபடியே வெளியிட்டன. ஆனால், டைம்ஸ் ஆஃப் இந்தியா, விகடன் இணையதளம் உள்ளிட்ட சில ஊடகங்கள் தமிழ்நாட்டில் சாதி மோதலை ஏற்படுத்த வேண்டும் என்ற வெறியுடன் திமுகவின் கைப்பாவையாக மாறி இந்த விஷயத்தில் பொய்யான தகவல்களை பரப்பின. இரு தரப்பினருக்கு இடையில் நடந்த மோதலில் ஒட்டுமொத்த வன்னிய சமுதாயத்தையும் களங்கப்படுத்தும் வகையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது. டைம்ஸ் ஆஃ இந்தியா நாளிதழில் வெளியான செய்தியில் இடம் பெற்றிருந்த பிழைகளை சுட்டிக்காட்டியும் அந்த நாளிதழ் அதன் தவறுக்கு வருத்தம் தெரிவிக்காதது  நல்லிணக்கத்துக்கு எதிரானவர்களின் கைகளில் அந்த இதழ் சிக்கித் தவிப்பதையே நிரூபிக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே திமுக ஆதரவு கட்சிகளுக்கும், திமுக ஆதரவு ஊடகங்களுக்கும் வன்னியர்கள் மென்மையான இலக்காக மாறியிருப்பதை உணர முடிகிறது. யாரோ செய்த தவறுக்கு எல்லாம் வன்னியர்கள் மீது பழி போடலாம்; அவர்களுக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி குரல் கொடுத்தால் அதன் மீது சாதி முத்திரை குத்தலாம் என்ற போக்கு அதிகரித்து வருகிறது. இது ஆரோக்கியமானதல்ல. இப்போக்கை சம்பந்தப்பட்ட சக்திகள் உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும்." என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், அரக்கோணம் இரட்டை கொலை வழக்கில் பாமகவிற்கு எந்த தொடர்பும் இல்லை என்று, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி தலைமையிலான விசாரணை குழு தகவல் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Arakkonam Murder Case


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->