அய்யயோ! 4 ஆண்டுகளில் கிடுகிடுவென உயர்ந்த மின் சார்ந்த கட்டணங்கள்...!
Electricity bills have skyrocketed past 4 years
தமிழ்நாட்டில் வீடுகளுக்கு ஒரு முனை மற்றும் மும்முனை பிரிவில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த 2 பிரிவுகளிலும் புதிய மின் இணைப்பு வழங்க மீட்டர் வைப்புத்தொகை,பதிவு கட்டணம்,மின் இணைப்பு கட்டணம், மின் பயன்பாடு வைப்பு தொகை, வளர்ச்சி கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்கிய பலவகை கட்டணத்தை மின் வாரியம் வசூலிக்கிறது. இந்த கட்டணம் ஒருமுறை செலுத்தக்கூடியதாகும்.இந்நிலையில் மின் பயன்பாட்டு கட்டணம் மற்றும் பல்வேறு வகை கட்டணங்களையும் 3.16 % உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.அவ்வகையில்,ஒரு முனை பிரிவில் மின் இணைப்புக்கான கட்டணம் ரூ.1,070-ல் இருந்து, ரூ.1,105 ஆகவும், மீட்டர் வைப்பு தொகை ரூ.800-ல் இருந்து ரூ.825 ஆகவும் உயர்ந்துள்ளது. வளர்ச்சி கட்டணம் ரூ.3000 -லிருந்து ரூ.3,095 ஆகவும், பதிவு கட்டணம் ரூ.215-லிருந்து ரூ.220 ஆகவும், வைப்புத்தொகை ரூ.320-லிருந்து ரூ.330 ஆகவும் அதிகரித்துள்ளது.இதேபோல் மும்முனை பிரிவு மற்றும் உயர் அழுத்த பிரிவில் புதிய மின் இணைப்பு பெறுவதற்கான பல்வகை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
இவற்றில் வளர்ச்சி கட்டணம் மட்டும், தரைக்கு அடியில் மின் வினியோகம் செய்யும் இடம் மற்றும் மின் கம்பம் வாயிலாக மின் வினியோகம் செய்யும் இடம் என தனித்தனியே நிர்ணயிக்கப்பட்டுள்ளன.இதுதவிர தாழ்வழுத்த பிரிவில் வீடுகளில் தீயில் எரிந்த சேதமடைந்த மீட்டரை மாற்றும் கட்டணம் ரூ.1,070-லிருந்து ரூ.1,105 ஆகவும், மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கான கட்டணம் ரூ.645-லிருந்து ரூ.665 ஆகவும் அதிகரித்துள்ளன.
இதேபோல் பல சேவைகளின் கட்டணங்கள் தாழ்வழுத்த மற்றும் உயர் அழுத்த பிரிவுகளில் தனித்தனியே உயர்த்தப்பட்டுள்ளன.மேலும், வீடு கட்டுவதற்கான கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டண உயர்வும் பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதாவது வீடு கட்டுபவர்கள் புதிய தற்காலிக மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 2 மடங்காக அதிகரித்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதிக்கு முன்பு மீட்டர் வைப்புத்தொகை ரூ.2000 -மாக இருந்தது. அது தற்போது ரூ.2,215 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் மின் பயன்பாடு வைப்பு தொகை ரூ.1,200-லிருந்து ரூ.1,990 ஆகவும், வளர்ச்சி கட்டணம் ரூ.5000 -லிருந்து ரூ.11,050 ஆகவும், மின் இணைப்பு கட்டணம் ரூ.750-லிருந்து ரூ.1,660 ஆகவும், பதிவு கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.220 ஆகவும் அதிகரித்துள்ளது. இதில் மொத்த கட்டணம் ரூ.9050-லிருந்து ரூ.17,135 ஆகவும் 4 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.
English Summary
Electricity bills have skyrocketed past 4 years