1,020 கோடி டெண்டர் முறைகேடு; முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உட்பட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு..!
Anti Corruption Department files case against 13 people including former minister KN Nehru
நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ. 1,020 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு உட்பட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
சில தினங்களுக்கு முன் கே.என். நேரு தொடர்புடைய 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திய நிலையில், 241 ஆவணங்கள், மின்னணு சாட்சியங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2021 முதல் 2025 வரை நடைபெற்ற அரசு டெண்டர்கள் ஒதுக்கீட்டில் ரூ.1,020 கோடி முறைகேடு மற்றும் லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
அமலாக்கத்துறையின் அளித்த தகவல்கள் மற்றும் 258 பக்க அறிக்கையின் அடிப்படையில், தமிழக அரசின் முன் அனுமதியுடன் நடத்தப்பட்ட விரிவான விசாரணைக்குப் பின் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்டுள்ள எஃப்.ஐ.ஆர் (முதல் தகவல் அறிக்கை) அறிக்கையின்படி, கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் கே.என்.மணிவண்ணன், ரவிச்சந்திரன், கே.என்.நேருவின் நெருங்கிய உதவியாளர் கவி பிரசாத், டி.வி.எச் குழுமத்தைச் சேர்ந்த டி.ரமேஷ், டி.பிரபு, மாதவரம் முன்னாள் எம்எல்ஏ எஸ்.சுதர்சனம், ஆர்.கே.நகர் முன்னாள் எம்எல்ஏ ஜே.ஜே.எபினேசர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
அதேப்போன்று, கே.என்.நேருவின் உதவியாளர் கவி பிரசாத்தின் மொபைல் போனில் இருந்து கைப்பற்றப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் படங்களின் மூலம், டெண்டர் முடிவுகள் திறக்கப்படுவதற்கு முன்பே குறிப்பிட்ட காண்ட்ராக்டர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், "கட்சி நிதி" (Party Fund) என்ற பெயரில் டெண்டர் மதிப்பில் 7.5% முதல் 10% வரை லஞ்சப் பணம் வசூலிக்கப்பட்டதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அரசுப் பொறியாளர்கள் இதில் தொடர்பு கொண்டு, லஞ்சக் கணக்கீடுகளை வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்து கொண்ட விவரங்களும் இருப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
English Summary
Anti Corruption Department files case against 13 people including former minister KN Nehru