தன்மானத்தை அடமானம் வைத்த கமலுக்கு என்ன தைரியம்! கோவையில் எகிறிய அண்ணாமலை!
Annamalai criticized MNM Kamal Hassan
மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமலஹாசன் கடந்த செப்டம்பர் 22ம் தேதி கோவையில் நடைபெற்ற அக்கட்சியினரின் கோவை மண்டல நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் விக்ரம் படத்திற்காக கூடிய கூட்டம் எனக்காக கூடாதா என பேசி இருந்தார். கமலஹாசனின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு ஆளானது.

திராவிட கட்சிகளுக்கு மாற்றாக அரசியலில் குதித்த கமலஹாசன் தற்போது திமுகவுடன் இணைய போவது குறித்து இணையதள வாசிகள் கடும் விமர்சனத்தை முன் வைத்தனர். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது என் மண் என் மக்கள் நடை பயணத்தின் ஒரு பகுதியாக கோவையில் பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
அப்போது பேசிய அவர் "கமலஹாசன் கோவையில் போட்டியிட்டபோது சினிமாவில் யார் நடிக்கிறார்கள், மக்களுக்காக யார் உழைக்கிறார்கள் என்று சரியாக புரிந்துகொண்டு கோவை மக்கள் வானதி சீனிவாசன் அவர்களை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தனர்.

ஆனால் சமீபத்தில் கோவைக்கு வந்த கமலஹாசன் விக்ரம் படத்திற்கு கூட்டம் வருகிறது. எனக்காக வர மாட்டாங்களா என பேசி உள்ளார். விக்ரம் படத்தில் நீங்கள் நடிப்பதை பார்ப்பதற்காக கூட்டம் வருகிறது. அரசியலுக்கு எப்படி வரும்? திமுகவை தலைகீழாக எதிர்த்த நீங்கள் இன்று ரெட் ஜெயின்ட் மூவி தயாரிப்பில் தான் நடிக்கிறீர்கள். உதயநிதி ஸ்டாலின் எந்திரிக்க சொன்னால் எந்திரிப்பீர்கள் உட்கார சொன்னால் உட்காருவீர்கள்.
நீங்கள் எவ்வளவு பெரிய நடிகர் உங்கள் கால் தூசிக்கு இணையானவரா உதயநிதி? கொள்ளையடித்த பணத்தில் ஒரு படத்தை தயாரிப்பதற்காக 100 கோடி ரூபாய் கொடுப்பார்கள் என்பதற்காக உங்களின் தன்மானத்தை முழுவதுமாக உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயின்ட் மூவிஸிடம் அடமானம் வைத்துவிட்டு தைரியமாக மீண்டும் கோவையில் போட்டியிடுவேன் என சொல்கிறீர்கள்" என நடிகர் கமலஹாசனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
Annamalai criticized MNM Kamal Hassan