மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க முடியாத நிலை, மாற்று ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் - டிடிவி தினகரன்!
AMMK ttv dinakaran tvk govt mettur dam
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள அறிக்கையில், "காவிரி டெல்டா மாவட்டங்களைச் சார்ந்த ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடிக்கும் குறைவாக இருப்பதால் நடப்பாண்டு குறுவை சாகுபடிக்கான தண்ணீர் ஜூன் 12 ஆம் தேதி திறக்க வாய்ப்பில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டு 6 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட வாய்ப்பில்லை என்பதால் குறுவை சாகுபடியே கேள்விக்குறியாகியுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததாலும், கர்நாடகாவில் இருக்கும் முக்கிய அணைகளில் நீர் இருப்பு மிகக் குறைவாக இருப்பதாலும் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்பதால் விவசாயம் மட்டுமல்லாது அதனையே நம்பியிருக்கும் பல லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தவெக என்பது புதிய அதிமுக என்று பேசும் தவெக அமைச்சர்கள், இதுபோன்ற இயற்கை இடர்பாடுகள் நிறைந்த சூழல் நிலவும் போது இதயதெய்வம் அம்மா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்போடு, நிலத்தடி நீரின் மூலமாகக் குறுவை சாகுபடியை மேற்கொள்ள முன்வரும் விவசாயப் பெருமக்களுக்கு மும்முனை மின்சாரத்தையும் தடையின்றி வழங்கிட முன்வர வேண்டும் என விவசாயிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் மின் தடையால், மின் மோட்டார்கள் பழுதடைவதும், போதிய நீர் பாய்ச்ச முடியாமல் அறுவடைக்குத் தயாரான நிலையில் உள்ள நெற்பயிர்கள் காய்ந்து வீணாவதாலும் விவசாயிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மேலும், டெல்டா பகுதியைத் தவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அரைவைக்கு அனுப்பப்படாமல் கொள்முதல் நிலையங்களிலேயே தேக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய கொள்முதல் தொகையும் நிலுவையில் இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகவே, அகில இந்திய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் தவெகவின் தலைவர் திரு ஜோசப் விஜய் அவர்கள், விரைவில் டெல்லி செல்லவுள்ளதாகத் தகவல் வரும் நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களைச் சந்தித்து தமிழகத்திற்கான காவிரி நீரை உரிய நேரத்தில் திறந்து விடுமாறு மாண்புமிகு கர்நாடக முதலமைச்சர் திரு.DK.சிவக்குமார் அவர்களுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு, காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதத்தைக் கைவிடும் உத்தரவாதத்தையும் பெற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
English Summary
AMMK ttv dinakaran tvk govt mettur dam