திருப்பூரில் பதுங்கியிருந்த வங்கதேசத்தினர் கைது – மக்கள் பாதுகாப்பில் தோல்வியடைந்த திமுக அரசின் மெத்தனப்போக்கு - டிடிவி தினகரன் கண்டனம்!
Ammk TTV Dinakaran condemn to DMK Government
பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக திருப்பூரில் பதுங்கியிருந்த வங்கதேசத்தினர் 6 பேர் கைது – மக்கள் பாதுகாப்பில் தோல்வியடைந்த திமுக அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரின் அறிக்கையில், "பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறி திருப்பூரில் பதுங்கியிருந்த 6 வங்கதேசத்தினரை டெல்லியிலிருந்து வந்த காவல்துறை கைது செய்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த ஐந்து ஆண்டுகளில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் என உச்சத்தில் இருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டோடு பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்களின் நடமாட்டமும் அதிகரித்திருப்பது மக்கள் பாதுகாப்பில் திமுக தோல்வியடைந்திருப்பதையே வெளிப்படுத்துகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை சிலிண்டர் வெடிப்புச் சம்பவமாகத் திசைதிருப்பி, மக்களை ஏமாற்ற முயன்ற திமுக அரசு, தற்போது டெல்லி காவல்துறையால் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டிருப்பதை என்ன சொல்லி சமாளிக்கப் போகிறது?
திருப்பூரில் தங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்களை டெல்லியிலிருந்து வந்த காவல்துறையினர் கைது செய்யும் வரையில் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால் 2023ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தமிழக தீவிரவாத தடுப்புப் படை தூங்கிக் கொண்டிருந்ததா ? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே, அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்தை கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் மையமாக மாற்றியதோடு, தற்போது தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் நடமாடும் மாநிலமாகவும் மாற்றியிருக்கும் திமுக அரசுக்கு அரசுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அனைவரும் இணைந்து முடிவு கட்டுவது நிச்சயம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Ammk TTV Dinakaran condemn to DMK Government