'பொங்கலும் ஆச்சு... கூந்தல் ஆரோக்கியமும் ஆச்சு'...! கறிவேப்பிலை வெண்பொங்கலின் மருத்துவ நன்மைகள்...!
medicinal benefits of curry leaves and Pongal
வெண்பொங்கல் என்றாலே பச்சரிசி, பாசிப்பருப்பு, மிளகு, சீரகம், நெய் ஆகியவற்றின் மணம் நம் நினைவுக்கு வரும். ஆனால், வழக்கமான வெண்பொங்கலுக்கு சற்றே வித்தியாசமாக, மணம் கமழும் கருவேப்பிலையை முக்கியப் பொருளாகக் கொண்டு ஒரு சுவையான பொங்கல் செய்து பார்த்தால் எப்படி இருக்கும்? கருவேப்பிலையை விரும்பாதவர்கள்கூட ரசித்து சாப்பிடும் வகையில், அதை அரைத்து பொங்கலுடன் கலந்து தயாரிக்கலாம். காலை உணவாக மட்டுமின்றி, உடலுக்கு தேவையான சத்துகள் நிறைந்த ஒரு புதுமையான உணவாகவும் இதை பரிமாறலாம்.
கருவேப்பிலையை ஒதுக்குபவர்களுக்கும் பிடிக்கும்!
சாப்பிடும் போது தட்டில் கிடக்கும் கருவேப்பிலையை தனியாக எடுத்துவைப்பது பலரது வழக்கம். சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் கூட இதைச் செய்வதைப் பார்க்கலாம். ஆனால், கருவேப்பிலையை அப்படியே சேர்ப்பதற்கு பதிலாக மிளகு, சிறுஞ்சீரகம் ஆகியவற்றுடன் வறுத்து அரைத்து உணவில் கலந்துவிட்டால், அதன் மணமும் சுவையும் பொங்கலுடன் கலந்து விடும்.இதனால் கருவேப்பிலையைத் தனியாக ஒதுக்காமல், அதன் சுவையையும் மணத்தையும் முழுமையாக அனுபவிக்கலாம்.
கருவேப்பிலை வெண்பொங்கலுக்கு தேவையான பொருட்கள்
பச்சரிசி – 300 கிராம்
பாசிப்பருப்பு – 150 கிராம்
கருவேப்பிலை – 100 கிராம்
மிளகு – 50 கிராம்
சிறுஞ்சீரகம் – 50 கிராம்
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – தேவையான அளவு
முந்திரி – தேவையான அளவு
பசும்பால் – 3 மேசைக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

முதலில் அரிசி, பருப்பை வேகவைக்கவும்
பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை நன்றாகக் கழுவி சுமார் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் அவற்றை குக்கரில் சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து நன்றாகக் குழையும் பதம் வரும் வரை வேகவைக்கவும்.குக்கரில் அழுத்தம் முழுமையாகத் தணிந்ததும், அரிசி மற்றும் பருப்பு கலவையை நன்றாக மசித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
கருவேப்பிலைக்கு மணம் கூட்டும் வறுவல்
அடுத்ததாக ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, மிளகு, சிறுஞ்சீரகம் மற்றும் நன்றாகக் கழுவிய கருவேப்பிலையைச் சேர்த்து மிதமான தீயில் நன்கு வறுக்கவும்.
கருவேப்பிலை மொறுமொறுப்பாகி, மிளகு மற்றும் சிறுஞ்சீரகத்தின் மணம் நன்றாக வெளிப்பட்டதும் அடுப்பை அணைக்கவும். இவை ஆறிய பிறகு அரைக்கும் பாத்திரத்தில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பொங்கலுக்கு இறுதிக்கட்ட சுவை சேர்க்கலாம்
மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, மிளகு, சிறுஞ்சீரகம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் முந்திரியைச் சேர்த்து வதக்கவும்.முந்திரி பொன்னிறமாக மாறியதும் பசும்பாலைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். பின்னர் அரைத்து வைத்துள்ள கருவேப்பிலை கலவையைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.இப்போது வேகவைத்து மசித்து வைத்துள்ள அரிசி–பாசிப்பருப்பு கலவையை வாணலியில் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக நன்றாகக் கலந்து கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, பொங்கல் ஒரே சீரான பதத்திற்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கலாம்.
சுடச்சுட பரிமாறினால் மணமும் சுவையும் அசத்தும்!
கருவேப்பிலையின் மணம், மிளகின் காரம், சிறுஞ்சீரகத்தின் வாசனை, முந்திரியின் மொறுமொறுப்பு என அனைத்தும் ஒன்றாகச் சேரும்போது இந்த வெண்பொங்கலுக்கு தனித்துவமான சுவை கிடைக்கும்.வழக்கமான வெண்பொங்கலைவிட வித்தியாசமான சுவையை விரும்புபவர்கள் இந்த கருவேப்பிலை வெண்பொங்கலை நிச்சயம் முயற்சி செய்து பார்க்கலாம்.
கருவேப்பிலையின் பயன்கள்
கருவேப்பிலையில் பல்வேறு ஊட்டச்சத்துகள் மற்றும் தாவரச் சேர்மங்கள் உள்ளன. அதை உணவில் அளவோடு சேர்த்துக் கொள்வது சீரான உணவுமுறையின் ஒரு பகுதியாக இருக்கலாம். குறிப்பாக, காய்கறிகள், கீரைகள் மற்றும் பல்வேறு இயற்கை உணவுகளுடன் சேர்த்து உட்கொள்வது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெற உதவும்.கருவேப்பிலை சாப்பிடுவதால் நரை முடி முற்றிலும் தடுக்கப்படும் அல்லது முடி கருமையாக மாறும் என்று உறுதியாகக் கூற முடியாது. தலைமுடியின் நிறம் மற்றும் வளர்ச்சியில் மரபியல், வயது, ஊட்டச்சத்து உள்ளிட்ட பல காரணிகள் பங்கு வகிக்கின்றன.அதனால், கருவேப்பிலையை ஒரு குறிப்பிட்ட நோய்க்கான மருந்தாகக் கருதாமல், சத்தான உணவின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்வதே சிறந்தது.
சுவையிலும் புதுமை… உணவிலும் ஊட்டச்சத்து!
வழக்கமாக உணவில் சேர்க்கப்படும் கருவேப்பிலையை சற்று வித்தியாசமான முறையில் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த வெண்பொங்கல், குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த காலை உணவாக மாறக்கூடும். குறிப்பாக கருவேப்பிலையை ஒதுக்கி வைக்கும் குழந்தைகளுக்கு, அதன் மணமும் சுவையும் பிடிக்கும் வகையில் இப்படி உணவில் கலந்து கொடுக்கலாம்.
English Summary
medicinal benefits of curry leaves and Pongal