முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு... முதல் ஆளாக பாராட்டிய டிடிவி தினகரன்...!
AMMK TTV Dhinakaran wish to TVK Govt and cm vijay amma unavagam
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாநகராட்சி உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள 600-க்கும் அதிகமான அம்மா உணவகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், தேவையான சமையல் உபகரணங்களை உடனடியாக கொள்முதல் செய்து தரமான உணவு தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கிடவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் பிறப்பித்திருக்கும் உத்தரவை மனமார வரவேற்கிறேன்.
மனிதர்கள் உயிர்வாழ அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவு அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமானதாக கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையில் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி லட்சக்கணக்கான தொழிலாளர்களின் பசியைப் போக்கும் அட்சயப்பாத்திரமாக விளங்கியதை எவராலும் மறுக்க முடியாது.
ஏழை, எளிய மக்களுக்கு வரப்பிரசாதமாக திகழ்ந்த அம்மா உணவகங்கள், இதயதெய்வம் அம்மா அவர்களால் தொடங்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக, கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் பணியாளர்கள் பற்றாக்குறையாலும், உபகரணங்கள் தட்டுப்பாட்டாலும் சந்திக்காத சிரமங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, அவை தொடங்கப்பட்ட நோக்கத்தையே சிதைக்கும் வகையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முடக்கி வைக்கப்பட்டிருந்தன.
தமிழகத்தில் புதியதாக ஆட்சிப்பொறுப்புக்கு வந்திருக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் அம்மா உணவகங்களின் அவசியத்தை உணர்ந்து அதனை மேம்படுத்த பிறப்பித்திருக்கும் உத்தரவை மனதார வரவேற்கும் இந்நேரத்தில், தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் அம்மா உணவகங்களை திறந்து ஏழைத் தொழிலாளர்களின் பசியைப் போக்கிட உதவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.
English Summary
AMMK TTV Dhinakaran wish to TVK Govt and cm vijay amma unavagam