50 நாள் ஆகியும் கடைமடைப் பகுதிக்கு வராத காவேரி நீர் - வேதனையில் விவசாயிகள்!
AMMK TTV Dhinakaran Condemn to DMK MK Stalin Govt Cauvery mater
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்குத் திறக்கப்படும் தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கும் அவலம்; விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பயனின்றி கடலில் கலக்கும் நீரை ஏரி, குளங்களில் நிரப்பி பாசனத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காகக் கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர், தற்போது வரை கடைமடைப் பகுதிக்கு வரவில்லை எனத் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் நேற்று நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் தங்களின் வேதனையைப் பதிவு செய்துள்ளனர்.
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் மேட்டூர் அணையிலிருந்து திறந்து வைக்கப்பட்ட தண்ணீர் 50 நாட்களைக் கடந்தும் கடைமடைக்கு வராமல் வீணாகக் கடலில் கலக்கும் நிலையில், கடைமடை பயிர் சாகுபடி சிறப்பாக நடைபெற்று வருவதாக நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருப்பது டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூர் அணையைத் திறக்கும் முன்பு காவிரி டெல்டா பகுதிகளின் கிளை ஆறுகளையும், கால்வாய்களையும் முறையாகத் தூர்வார வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காத நிர்வாகத் திறனற்ற திமுக அரசால், நடப்பாண்டிலும் டெல்டா பாசன விவசாயிகள் முழு அளவிலான சாகுபடி செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, காவிரி டெல்டா கிளை ஆறுகள் மற்றும் கால்வாய்களைத் தூர்வாருவதற்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்துவதோடு, வீணாகக் கடலில் கலக்கும் உபரிநீரை ஆறு,குளங்களில் சேமித்து பாசனத்திற்குத் திருப்பி விடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
English Summary
AMMK TTV Dhinakaran Condemn to DMK MK Stalin Govt Cauvery mater