புதருக்குள் போனால் கெடுக்கலாமா? உங்கள் மகளாக இருந்தால் இப்படி கேட்பீர்களா? கொந்தளித்த பேரரசு!
Coimbatore Harassment case Perarasu condemn
மதுரையைச் சேர்ந்த 21 வயது மாணவி ஒருவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் கல்வி கற்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, தனது காதலனுடன் காரில் விமான நிலைய பின்புறம் பேசிக்கொண்டு இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த சதீஷ், கருப்புசாமி, கார்த்திக் மற்றும் மதுரையைச் சேர்ந்த தவசி குணா ஆகியோர், காதலனை அரிவாளால் தாக்கி, மாணவியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
தகவல் அறிந்த போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு, குற்றவாளிகளை துப்பாக்கிச் சூட்டில் பிடித்தனர். மூவரும் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை வரும் 19ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், “அந்த பெண் அந்த நேரத்தில் அங்கே போனதே ஏன்?” என்ற கேள்வி எழுப்பி சிலர் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றம்சாட்டியிருப்பது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
இதுகுறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பேரரசு, “பெண்கள் முன்னேறிவிட்டார்கள் என்பது மிகப் பெரிய பொய். ஒரு பெண் தனியாகச் சென்றாலே அவளைப் பற்றிக் கேள்வி எழுப்புகிறார்கள். கோவை மாணவி சம்பவத்தைப் பார்த்தாலே மனம் பதறுகிறது.
‘இரவு 11 மணிக்கு அந்தப் பெண்ணுக்கு அங்கே என்ன வேலை?’ என்று கேட்கிறார்கள். உங்களுடைய மகளுக்கு நடந்திருந்தால் இதே கேள்வியை கேட்பீர்களா? அண்ணா பல்கலைக்கழகத்திலும் ‘அந்த பெண் புதருக்குள் போனாரா?’ என்று சொல்கிறார்கள். அப்படி போனால் மாணவியை கெடுக்கலாமா?” என்று கடும் கண்டனம் தெரிவித்தார்.
English Summary
Coimbatore Harassment case Perarasu condemn