எடப்பாடிக்கு பிரஷர் கொடுக்கும் அமித்ஷா! பிரேமலதா பக்கம் திருப்பி விட்ட அதிமுக! யாருடன் கூட்டணி? குழப்பத்தில் தேமுதிக! - Seithipunal
Seithipunal


2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. குறிப்பாக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தேமுதிக இணைகிறதா இல்லையா என்பதே தற்போது அரசியல் வட்டாரங்களில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. நீண்ட காலமாக இழுபறியில் இருந்து வரும் அதிமுக – தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை, இப்போது ஒரு முடிவை நோக்கி நகர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு இரண்டு நாள் அவகாசம் வழங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. வரும் ஜனவரி 23-ஆம் தேதி மதுராந்தகத்தில் அதிமுக – பாஜக சார்பில் நடைபெற உள்ள பிரம்மாண்ட மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கு முன்பாகவே தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்க வேண்டும் என்ற அழுத்தம் பாஜக மேலிடத்திலிருந்து எடப்பாடிக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கூட்டணியை உடனடியாக இறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.

இந்தச் சூழலில்தான், தேமுதிக உடனான பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்க அதிமுக தலைமை தீவிரமாக செயல்பட தொடங்கியுள்ளதாக தெரிகிறது. கூட்டணி பேச்சுவார்த்தையில் தேமுதிக தரப்பில் 21 சட்டமன்றத் தொகுதிகள், அதனுடன் ஒரு ராஜ்யசபா எம்பி பதவி ஆகியவை கோரப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், ஒவ்வொரு தொகுதியிலும் திமுக வேட்பாளர்களுக்கு இணையான அளவில் தேர்தல் செலவுகளை அதிமுக ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையும் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் அதிமுக தரப்பில், அதிகபட்சமாக 10 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க முடியும் என்றும், தற்போதைய அரசியல் சூழலில் ராஜ்யசபா சீட் வழங்குவது சாத்தியமில்லை என்றும் தெளிவாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இடைவெளி காரணமாகவே கூட்டணி பேச்சுவார்த்தை முடிவில்லாமல் நீடித்து வருகிறது.

இதற்கிடையே, அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, தேமுதிக தரப்பு திமுகவுடனும் மறைமுகமாக தொடர்பில் இருந்ததாக தகவல்கள் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. திமுக தரப்பில் தேமுதிகக்கு 7 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில், மூன்று தரப்புகளுடனும் ஒரே நேரத்தில் பேரம் பேசும் போக்கு அதிமுக தலைமையை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னணியில்தான், “இன்னும் இரண்டு நாட்களில் உங்கள் முடிவை தெளிவாக அறிவியுங்கள். இல்லையெனில் மாற்று அரசியல் ஏற்பாடுகளை நாங்கள் பார்க்க வேண்டிய நிலை வரும்” என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தேமுதிகக்கு கறாரான எச்சரிக்கை விடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஒருகாலத்தில் தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக இருந்த தேமுதிக, தற்போது எந்த கூட்டணியில் இணைவது என்ற முடிவை இன்னும் வெளிப்படையாக அறிவிக்காதது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக, சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதாகவும், ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறும் கட்சி மாநாட்டில் கூட்டணி குறித்து முடிவு அறிவிக்கப்படும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். ஆனால் மாநாடு முடிந்து பத்து நாட்களுக்கு மேலாகியும், கூட்டணி குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம் என மூன்று தரப்புகளுடனும் தேமுதிக மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படும் நிலையில், அந்த மூன்று தரப்புகளும் ஒருவித அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகுகின்றன. இதற்கிடையே பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதால், அதற்கு முன்பாகவே கூட்டணியை இறுதிச் செய்ய வேண்டிய கடும் நெருக்கடி எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது. இந்த அழுத்தத்தின் காரணமாகவே, தேமுதிகக்கு எடப்பாடி பழனிசாமி காலக்கெடு விதித்துள்ளார் என்பதே தற்போதைய அரசியல் வட்டாரங்களின் பேசுபொருளாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amit Shah puts pressure on Edappadi AIADMK has turned its back on Premalatha Who will be the alliance partner DMDK in confusion


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->