எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக – சசிகலா முதல் செங்கோட்டையன் வரை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நீண்ட பட்டியல்!
AIADMK led by Edappadi Palaniswami A long list of those removed from the AIADMK from Sasikala to Sengottaiyan
அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, எடப்பாடி பழனிசாமி கட்சியில் ஒழுங்கும் கட்டுப்பாடும் நிலைநிறுத்த நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளார். ஆனால் இதன் விளைவாக, கட்சியின் முன்னணி தலைவர்களாக இருந்த பலரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
2017-ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து நடத்திய பொதுக்குழு கூட்டத்தில், அப்போது கட்சியின் தற்காலிக பொது செயலாளராக இருந்த வி.கே. சசிகலாவின் நியமனம் ரத்து செய்யப்பட்டது. அதோடு, டிடிவி தினகரனும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் எம்ஜிஆர் காலத்தில் எம்.பியாக இருந்த கே.சி. பழனிசாமியும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.
அடுத்து, 2022-ஆம் ஆண்டு ஓபிஎஸ் – எடப்பாடி இடையே ஏற்பட்ட அதிகார மோதலால், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், புகழேந்தி, மனோஜ் பாண்டியன், ஓ.பி. ரவீந்திரநாத் உள்ளிட்ட 18 பேரை எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கினார். அதற்கு பதிலாக, ஓபிஎஸ் தரப்பும் எடப்பாடி உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியதாக அறிவித்தது. இந்த மோதல் நீதிமன்றம் வரை சென்றது. இறுதியில், அதிமுக சின்னம் மற்றும் கட்டுப்பாடு எடப்பாடி தரப்பின் கைகளில் நிலைத்தது.
அதன்பின், ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்த பண்ருட்டி ராமச்சந்திரன், மருது அழகுராஜ், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரும் நீக்கப்பட்டனர். சமீபத்தில், முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, பின்னர் திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில், தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக எடப்பாடி – செங்கோட்டையன் இடையே பனிப்போர் நிலவி வந்தது. சமீபத்தில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க எடப்பாடிக்கு ஒரு கெடு விதித்திருந்தார் செங்கோட்டையன். இதையடுத்து அவரது கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன.
பின்னர், பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் செங்கோட்டையன் கலந்து கொண்டு நெருக்கமாக பேசினார். இதனால் கட்சிக்குள் அதிருப்தி எழுந்தது.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில்,“கட்சியின் கொள்கை மற்றும் ஒழுக்கத்துக்கு முரணான வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கண்ணியத்தை குலைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்ததாலும் செங்கோட்டையன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார். அதிமுகவில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது,”என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தலைவர்களின் பட்டியலில் தற்போது செங்கோட்டையனும் இணைந்துள்ளார். சசிகலா, டிடிவி தினகரன், கேசி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், அன்வர் ராஜா, இப்போது செங்கோட்டையன் வரை — இந்த பட்டியல், எடப்பாடி தலைமையின் கீழ் அதிமுக எப்படி ஒரு புதிய வடிவம் எடுக்கிறது என்பதற்கான சான்றாக பார்க்கப்படுகிறது.
English Summary
AIADMK led by Edappadi Palaniswami A long list of those removed from the AIADMK from Sasikala to Sengottaiyan