அனைவருக்கும் நன்றி... ஓபிஎஸ் பாணியில் செங்கோட்டையன் அதிரடி!
ADMK Sengottaiyan vs eps Gopi
அதிமுக மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்காக 10 நாள் கெடு வழங்கியிருந்த அவர், அது நடைமுறைக்கு வரவில்லை என்றால், இதே கோரிக்கையுடன் உள்ளவர்களை தனியே ஒன்றிணைப்பேன் என்றும் எச்சரித்தார்.
அதனைத் தொடர்ந்து, அமைப்பு செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து செங்கோட்டையனை நீக்கியதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த நடவடிக்கைக்கு எதிராக, கோபி ஒன்றிய, நகர, பேரூர் கழகங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து, அந்த கடிதங்களை முன்னாள் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமாவிடம் ஒப்படைத்தனர். பின்னர், அவை அனைத்தும் தலைமைக்கு அனுப்பப்பட உள்ளன.
சத்தியபாமா தானும் தனது வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்து, செங்கோட்டையனுக்கு வெளிப்படையான ஆதரவை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவருடைய மகளிர் அணி பொறுப்பும் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் நீக்கப்பட்டது.
இந்நிலையில், அதிமுக தலைமைக்கு எதிராக குரல் கொடுத்த செங்கோட்டையனுக்கு, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தொடர்ந்து ஆற்றலை வழங்கி வருகின்றனர். கோவை பகுதியை சேர்ந்த ஓ.பி.எஸ். அணியினர், அவரை நேரில் சந்தித்து சிங்காநல்லூர் சிவன் கோவில் பிரசாதத்தை வழங்கி ஆதரவு தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் வந்து தன்னிடம் ஆதரவை வெளிப்படுத்துவதாகக் கூறினார். அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், மக்கள் நலனுக்காக தன் பணி தொடர்ந்து நடைபெறும் என உறுதியளித்தார்.
English Summary
ADMK Sengottaiyan vs eps Gopi