நோகுதய்யா; மனசு நோகுதய்யா... அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் செம்மலை!
ADMK Semmalai resign EPS
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் செம்மலை அக்கட்சியிலிருந்து விலகுவதாக, எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவரின் அந்த கடிதத்தில், "தேர்தலுக்குப்பிறகு அஇஅதிமுகவில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மன வேதனையை உண்டாக்கி விட்டது. இதே மனநிலையில் தான், இயக்கம் தொடங்கிய நாளிலிருந்து இந்த இயக்கத்திற்காக பாடுபட்டு வந்த லட்சக்கணக்கான தொண்டர்களும் இருந்து வருகிறார்கள். நடந்த சம்பவங்கள், நடக்கும் சம்பவங்கள் எதுவுமே திருப்தி அளிப்பதாக இல்லை. மாறாக கவலை அளிப்பதாகவே உள்ளது. பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் உருவாக்கிய இயக்கம், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காப்பாற்றிய இயக்கத்திற்கு இந்த கதியா?
"கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா!
நோகுதய்யா; மனசு நோகுதய்யா'' என்ற உள்மனதின் வெளிப்பாடு எல்லோருக்குமானதே ஆகும்.
"உட்கட்சி சண்டையால் அதிமுக அசிங்கப்படுகிறது”. என்று பிரபல ஆங்கில நாளிதழ்கள் பரிகாசம் செய்யும் அளவிற்கு நிலைமை போய்விட்டது.
புரட்சித்தலைவர் அவர்களும் புரட்சித்தலைவி அவர்களும் எவ்வளவோ வாய்ப்புகளை எனக்கு வழங்கியதோடு அரசியலில் நிலையான ஓர் அங்கீகாரத்தை எனக்கு உருவாக்கித் தந்தார்கள்.
அந்த நன்றிக்காக மறைந்த அந்த ஆளுமை மிக்கஇருபெரும் தலைவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த இயக்கத்திற்கு என் அனுபவம் பயன்படவேண்டும் என்று சுயநலமின்றி தொடர்ந்து பணியாற்றி வந்தேன்.
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவுக்குப்பிறகு எனக்கு பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. தடுக்கப்பட்டன. அதைப்பற்றி கூட நான் கவலைப்படவில்லை. எனது ஆதங்கத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தலைமைக்கு கட்டுப்பட்டு தொடர்ந்து பணியாற்றி வந்தேன்.
மறைந்த ஆளுமை மிக்க இருபெரும் தலைவர்களுடன் அரசியலில் பயணித்ததை நான்ஒரு கணம் எண்ணிப்பார்க்கிறேன். இப்போது உருவாகியுள்ள சூழ்நிலைகளை பார்க்கிறபோது இயக்கத்தில் தொடர்ந்து பயணிக்க என் மனம் இடம் தரவில்லை. மனம் வேதனைப்படுகிறது.
எவ்வளவோ வாய்ப்புகளை எனக்கு வழங்கியதோடு அரசியல் வானில் அடையாளம் காட்டப்பட்ட ஒரு ஒளிரும் நட்சத்திரமாக என்னை ஆளாக்கி அழகு பார்த்த மறைந்த இரு பெரும் தலைவர்களின் ஆன்மாக்களிடம், நான் எடுத்த இந்த முடிவுக்கு மன்னிப்புக் கோரி கனத்த இதயத்தோடு நான் வகிக்கும் பொறுப்பிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகிக்கொள்கிறேன் என்பதை தலைமைக்கு வருத்தத்துடன் தெரிவித்து க்கொள்கிறேன்" என்று எஸ்.செம்மலை தெரிவித்துள்ளார்/