ஒரிஜினலையே மிஞ்சிய கள்ளநோட்டு...! கோவையில் ரூ.200 நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட 3 பேர் அதிரடி கைது...!
counterfeit note that surpasses original 3 people arrested printing and circulating 200 notes Coimbatore
கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியில் வசித்து வரும் சதாம் ஹுசைன் என்பவர் நர்சரி தொழிலை நடத்தி வந்துள்ளார். இவருடன் கார்மல் நகரைச் சேர்ந்த பைசல், கரும்புக்கடை அண்ணா காலனியைச் சேர்ந்த பாரூக் மற்றும் கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த காஜாமைதீன் என்ற ஹக்கிம் ஆகியோர் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இவர்களது வீடுகளில் போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதோடு, கள்ளநோட்டுகள் அச்சடிக்கும் சட்டவிரோத செயல்களும் நடைபெற்று வருவதாக கோவை மாநகர தெற்கு துணை காவல் ஆணையாளர் கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் தனிப்படை காவலர்கள் சதாம் ஹுசைன் இல்லத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருநூறு ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் நூற்றெண்பத்திநான்கு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போதை மாத்திரைகள் மற்றும் உயர்ரக போதைப்பொருளாக கருதப்படும் மெத்தபெட்டமைன் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.மேலும், கள்ளநோட்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் அச்சு எந்திரமும் காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டது.
கைப்பற்றப்பட்ட கள்ளநோட்டுகளின் மொத்த மதிப்பு முப்பத்தாறாயிரத்து எண்ணூறு ரூபாய் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இதனைத் தொடர்ந்து சதாம் ஹுசைன், பைசல் மற்றும் காஜாமைதீன் ஆகிய மூவரையும் காவலர்கள் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள்மீது எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.கள்ளநோட்டு அச்சடிக்கும் எந்திரம் இவர்களுக்கு எவ்வாறு கிடைத்தது, இதன் பின்னணியில் மேலும் யார் யார் தொடர்புடையவர்கள் உள்ளனர் என்பது குறித்து காவலர்கள் பல்வேறு கோணங்களில் ஆழ்ந்த விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவை நகரில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
counterfeit note that surpasses original 3 people arrested printing and circulating 200 notes Coimbatore