வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பில்லையா...? தூங்கிய பெண்கள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர முதியவர்...! - அதிர்ச்சியூட்டும் பின்னணி என்ன...?
Isnt it safe inside house cruel old man poured petrol sleeping women and set them fire What shocking background
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகிலுள்ள பாளையம்பட்டி அருந்ததியர் தெருவில் நள்ளிரவைக் கிழித்தெறிந்த கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அங்கு வசித்து வந்த பாண்டியராஜ் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி சாந்தி தனது குடும்பத்தை தாங்கிக் கொள்ள கோபாலபுரம் பகுதியில் துப்புரவுப் பணியாளராக உழைத்து வந்தார். இவருக்கு சந்தீப்குமார் என்ற மகனும், யாழினி என்ற மகளும் உள்ளனர்.

இந்தச் சம்பவம் நடைபெற்ற இரவு, சாந்தியுடன் உறவினரான ஸ்ரீதேவியும் வீட்டில் தங்கியிருந்தார். சாந்தி மற்றும் ஸ்ரீதேவி இருவரும் வீட்டு வாசற்பகுதியில் கதவை சற்றே திறந்தபடி உறங்கிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிகாலை மூன்று மணியளவில், மர்ம நபர் ஒருவர் அமைதியாக வீட்டருகே வந்து, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த இருவர்மீதும் பெட்ரோலை ஊற்றியதாக கூறப்படுகிறது.
அவர்கள் திடீரென விழித்தெழுந்து என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்பே அந்த நபர் தீ மூட்டி விட்டு இருளில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒருசில நொடிகளில் தீ வேகமாக பரவி, சாந்தி மற்றும் ஸ்ரீதேவி இருவரும் கொடூரமான தீக்காயங்களுக்கு உள்ளாகினர். பெண்களின் அலறல் சத்தம் கேட்டு பதறியெழுந்த சந்தீப்குமார், உயிரையும் பொருட்படுத்தாமல் தாயாரையும் உறவினரையும் வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து தீயை அணைக்க போராடியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உயிர்ப்போராட்டத்தில் துடித்த இருவரும் உடனடியாக அவசர ஊர்தி மூலம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பதற்றமூட்டும் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கருப்பையா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரடி ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
முதற்கட்ட விசாரணையில், பெண்கள்மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த நபர் காரியாபட்டி அருகேயுள்ள கல்குறிச்சி பகுதியைச் சேர்ந்த முத்து என தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து தனிப்படை காவலர்கள் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியதா அல்லது வேறு ஏதேனும் மறைபின்னணி உள்ளதா என்பது குறித்து காவலர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Isnt it safe inside house cruel old man poured petrol sleeping women and set them fire What shocking background