இனி எல்லை தாண்ட முடியாது...! - ஜல்லி, எம்-சான்ட் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி... தமிழக அரசின் அதிரடி உத்தரவால் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்தவும், விலை உயர்வை தடுப்பதற்கும் முக்கிய நடவடிக்கையாக, பிற மாநிலங்களுக்கு ஜல்லி மற்றும் கட்டுமானக் கற்களை எடுத்துச் செல்ல மூன்று மாதங்களுக்கு தற்காலிக தடை விதித்து தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள உத்தரவில், மாநிலம் முழுவதும் சாலை, பாலம், அரசு கட்டிடங்கள், தொழில் வளாகங்கள் மற்றும் வீட்டு வசதித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால், ஜல்லி, கட்டுமானக் கற்கள், கண்டாஸ், பாறைகள், எம்-சாண்ட், மெட்டல் ஜல்லி, பாலாஸ்ட், மில் கற்கள் மற்றும் ஹேண்ட் சக்காய்ஸ் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு அதிகளவில் ஜல்லி மற்றும் கட்டுமானக் கற்கள் கொண்டு செல்லப்படுவதால், மாநிலத்துக்குள்ளேயே கட்டுமானப் பொருட்களின் பற்றாக்குறை உருவாகி, அவற்றின் விலை உயர்வதுடன் செயற்கையான தட்டுப்பாடும் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் தாக்கம் அரசு மற்றும் தனியார் உள்கட்டமைப்புத் திட்டங்களின் செயல்பாட்டிலும் நேரடியாக எதிரொலிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் மற்றும் பல அச்சு கொண்ட கனரக வாகனங்களின் தொடர்ச்சியான இயக்கத்தால் மாநில சாலைகள் விரைவாக சேதமடைந்து வருவதுடன், சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கர்நாடகா, கேரளம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற அண்டை மாநிலங்களில் கட்டுமானக் கற்களுக்கு போதிய அளவு வளங்கள் இருந்தபோதிலும், தமிழகத்தில் இருந்து தொடர்ந்து பெருமளவில் கற்கள் எடுத்துச் செல்லப்படுவதால், உற்பத்திக்கும் தேவைக்கும் இடையே குறிப்பிடத்தக்க இடைவெளி உருவாகியுள்ளது.

இந்த நிலைமை, சட்டவிரோத குவாரி செயல்பாடுகள், அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கற்கள் வெட்டி எடுக்கும் முறைகேடுகள் மற்றும் இயற்கை வளங்களின் அளவுக்கு மீறிய சுரண்டலுக்கு வழிவகுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் சமநிலையும், இயற்கை வளங்களின் நிலைத்தன்மையும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, புதுச்சேரி மற்றும் காரைக்காலைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் ஜல்லி, கட்டுமானக் கற்கள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து வகை கனிமப் பொருட்களையும் எடுத்துச் செல்ல மூன்று மாதங்களுக்கு தற்காலிக தடை அமல்படுத்தப்படுவதாக உத்தரவில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த உத்தரவை மீறி கட்டுமானப் பொருட்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல முயற்சிப்பவர்கள் மீது நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையை முழுமையாக அமல்படுத்த மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாநில எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு, விதிமீறல்களை தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

No more crossing border End smuggling jalli M sand Tamil Nadu government drastic order creates excitement


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->