"விடியல் ஆட்சிக்கு முடிவு கட்டும் புத்தாண்டு": திமுகவைச் சாடிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
admk jayakumar condemn to dmk govt minister election 2026
சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். திமுக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த அவரது பேட்டியின் முக்கிய அம்சங்கள் இதோ:
ஆட்சி மாற்றமும் தேர்தல் முழக்கமும்:
"பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற பழமொழிக்கேற்ப, வரும் புத்தாண்டு மற்றும் சட்டமன்றத் தேர்தல் திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் தொடக்கமாக அமையும். போலி வாக்குறுதிகளையும், பசப்பு வார்த்தைகளையும் தமிழக மக்கள் இனி நம்பத் தயாராக இல்லை என அவர் குறிப்பிட்டார்.
போர்க்களமாகும் தமிழ்நாடு:
கடந்த 10 நாட்களாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்களின் தொடர் போராட்டத்தால் தமிழகமே போர்க்களமாக உள்ளது. இவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல், முதல்வர் ஸ்டாலின் தினமும் 'போட்டோ ஷூட்' நடத்துவதிலேயே குறியாக இருக்கிறார் என்று ஜெயக்குமார் சாடினார்.
கள்ளக்குறிச்சி மற்றும் திருத்தணி சம்பவம்:
இரட்டை வேடம்: கள்ளச்சாராய உயிரிழப்புகள் நடந்தபோது கள்ளக்குறிச்சிக்குச் செல்லாத முதல்வர், இப்போது தேர்தலுக்காக அங்குச் சென்றுள்ளார்.
தலைகுனிவு: திருத்தணியில் வடமாநில வாலிபர் தாக்கப்பட்ட சம்பவம் 'வந்தாரை வாழவைக்கும்' தமிழகத்திற்கே தலைகுனிவாகும். இது அரசின் கையாலாகாத தனத்தைக் காட்டுகிறது.
போதைப் பொருள் சர்ச்சை:
"தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் புழக்கம் இல்லை" என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். சீரழிந்து வரும் தமிழகத்தை மீட்க, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
English Summary
admk jayakumar condemn to dmk govt minister election 2026