'தி கேரளா ஸ்டோரி 2' படத்துக்கு எதிர்ப்பு; பரோட்டா-பீப் கறி திருவிழா நடத்தும் DYFI மற்றும் SFI ..!
DYFI and SFI hold parotta peep curry festival in protest against the film The Kerala Story 2
கடந்த 2023 ஆம் ஆண்டு சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியான படம் 'தி கேரளா ஸ்டோரி'. இதில், கேரளாவில் 32,000 இந்துப் பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மத மாற்றம் செய்யப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக திரைக்கதை சித்தரிக்கப்பட்டது.
இந்த படம் வெளியான போது நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அத்துடன், கடந்த 2023-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் 02 தேசிய விருதுகள் இப்படத்துக்கு வழங்கப்பட்டதும் மத்திய அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் 2 ஆம் பாகம் உருவாகியுள்ளது. காமக்யா நாராயண் சிங் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

'தி கேரளா ஸ்டோரி' முதல் பாகம் போலவே டிரெய்லரில் சர்ச்சை வசனங்கள் மற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதாவது, இந்து பெண்களை இஸ்லாமிய மதத்துக்கு மாற்றுவது மற்றும் வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி ஊட்டும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், கேரள சுற்றுலாத் துறை "No Beef With Anyone" என்ற வாசகத்துடன் ஒரு போஸ்டரைப் பகிர்ந்துள்ளது. அத்துடன், சிபிஐ(எம்) கட்சியின் இளைஞர் அமைப்பான DYFI மற்றும் மாணவர் அமைப்பான SFI ஆகியவை மாநிலம் முழுவதும் 'பீப் திருவிழா' நடத்தித் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தன. திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் பீப் கறியும் பரோட்டாவும் பொதுமக்களுக்குப் பரிமாறப்பட்டன.
அத்துடன், கேரளாவின் மதச்சார்பற்ற பிம்பத்தைச் சிதைக்கவும், மத வெறுப்பைத் தூண்டவும் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இது குறித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது;
"கேரளா மத நல்லிணக்கம் மற்றும் சட்ட ஒழுங்கிற்கு முன்மாதிரியான மாநிலம். இத்தகைய பொய்யான பரப்புரைகளை மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
அதேப்போன்று காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால், "பொய்க் கதைகளை உருவாக்கி கேரளாவை அவமானப்படுத்தும் முயற்சி இது" என்று குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், படத்தின் முதல் பாகத்திற்கு தேசிய விருது வழங்கி பாஜக இத்தகைய படங்களை ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு, கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர், இது கருத்து சுதந்திரம் என்றும், முதல்வர் பினராயி விஜயன் இரட்டை வேடம் போடுவதாக விமர்சித்துள்ளார். இதற்கிடையே இந்த படத்துக்கு வாங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
DYFI and SFI hold parotta peep curry festival in protest against the film The Kerala Story 2