“தமிழகத்தில் ‘விசில் புரட்சி’ வரும்”.. தவெக 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும்!கான்ஃபிடன்சில் பேசிய தவெக செங்கோட்டையன்!
A whistle revolution is coming in Tamil Nadu Tvk will win more than 200 seats Tvk Sengottaiyan spoke with confidence
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து, வாக்கு எண்ணிக்கைக்காக அரசியல் கட்சிகள் ஆவலுடன் காத்திருக்கும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி வாய்ப்பு குறித்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பல்வேறு வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மே 4ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையே தமிழக அரசியலின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்க உள்ளது.
இந்த நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. அதேபோல் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் பழனி உள்ளிட்ட கோவில்களில் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “விஜய் திருச்செந்தூரில் முருகப்பெருமானை தரிசனம் செய்துள்ளார். தமிழகத்தை வழிநடத்தப்போகும் தலைவராக அவர் உருவெடுத்துள்ளார். அவரது தொலைநோக்கு அரசியல் சிந்தனையை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்,” என்றார்.
மேலும் தேர்தல் முடிவுகள் குறித்து நம்பிக்கையுடன் பேசிய அவர், “தமிழகம் பல்வேறு புரட்சிகளை கண்டுள்ளது. இப்போது தவெக தலைவர் விஜய்யின் ‘விசில் புரட்சி’ நடைபெறப்போகிறது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும்,” எனத் தெரிவித்தார்.
தவெக வாக்குகளை மட்டும் பிரிக்கும் கட்சியாகவே இருக்கும், ஆட்சி அமைக்க முடியாது என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “யார் என்ன சொன்னாலும் தவெக-வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது” என்றார்.
தமிழக அரசியலில் புதிய சக்தியாக களம் இறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மே 4ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகே தெளிவாகும். தற்போதைக்கு, கட்சியின் நிர்வாகிகள் வெற்றி நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
English Summary
A whistle revolution is coming in Tamil Nadu Tvk will win more than 200 seats Tvk Sengottaiyan spoke with confidence