'விஜயகாந்திற்கு 'பாரத ரத்னா விருது' வழங்க வேண்டும்; அரசுக்குச் சொந்தமான பொது இடத்தில் 'மணிமண்டபம்' அமைக்கவேண்டும்'; தேமுதிக மாநாட்டில் தீர்மானம்..!
A resolution was passed at the DMDK conference demanding that Vijayakanth be awarded the Bharat Ratna and that a memorial hall be built in his honor
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதனையொட்டி கூட்டணி, தேர்தல் அறிக்கை, வேட்புமனு, பொதுக்கூட்டம் போன்ற பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளன. அதன்படி, இன்று தேமுதிக, 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0' என்ற பெயரில் பெரும்மாநாட்டை நடத்தியது. குறித்த மாநாட்டில் தேமுதிக 10 தீர்மானங்கள் கொண்டு வந்துள்ளது.
01- 2026 ஆம் ஆண்டு அமையவிருக்கும் ஆட்சி, மக்களின் நலன், மற்றும் எதிர்கால தலைமுறையின் நம்பிக்கைகளை நிறைவேற்றும் ஆட்சியாக இருக்க வேண்டும்.
02- சட்டம், ஒழுங்கை சீரமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அனைத்து வகையான போதைப் பொருட்களின் விற்பனையை முழுமையாக ஒழிக்க வேண்டும்.
03- போதைப் பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் அதற்கு துணைபுரிவோருக்கு எதிராக கடுமையான தண்டனை மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

04- தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி உள்ளிட்ட அனைத்து பணியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து, அவர்களின் பணிகளை நிரந்தரப்படுத்தி, சம ஊதியம் மற்றும் நிலுவையில் உள்ள ஊதியங்களை உடனடியாக வழங்கி எதிர்காலத்தில் எந்தவிதப் போராட்டங்களுக்கும் இடமளிக்காத வகையில் நிரந்தரமான தீர்வுகளை அரசு உருவாக்க வேண்டும்.
05- சாதி, மத அடிப்படையில் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகள் மற்றும் செயல்கள் சனாதனத்திற்கும், சமூக அமைதிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கருத்துக்களை கடுமையாகத் தடுக்கவும், மதரீதியான மோதல்களை உருவாக்குவோர் மீது காவல்துறை பாரபட்சமின்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
06- மத்திய அரசு கொண்டு வந்த தொழிலாளர் சட்டங்கள் திருத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
07- பொங்கல் பரிசுத்தொகுப்புகள் எந்த விதமான பாகுபாடும் இன்றி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முறையாகவும், முழுமையாகவும் சென்றடைய வேண்டும்.

08- மகளிர் உரிமைத் தொகை, மாணவர்களுக்கு மடிக்கணினி மற்றும் டேப் ஆகியவை அனைவருக்கும் முறையாக சென்றடைய வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்து, விவசாயிகளுக்கு நிரந்தரமான வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் வரப்போகும் அரசு இருக்க வேண்டும்.
09- விவசாயத்தை ஒரு லாபகரமான தொழிலாக மாற்றுவதற்கான திட்டங்களை அரசு அமல்படுத்த வேண்டும். கொள்முதல் செய்யப்படும் கரும்பிற்கு உரிய நியாயமான விலையை தமிழக அரசே நிர்ணயித்து, கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
10- தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் விளைவிக்கும் நெல் மணிகளை பாதுகாக்க, போதிய கிடங்குகளை அமைக்க வேண்டும் விஜயகாந்திற்கு நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' விருதை வழங்க வேண்டும் தமிழக அரசு, அரசுக்குச் சொந்தமான ஒரு பொது இடத்தில், விஜயகாந்திற்கு "மணிமண்டபம்" அமைத்துத் தரவேண்டும். என தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
English Summary
A resolution was passed at the DMDK conference demanding that Vijayakanth be awarded the Bharat Ratna and that a memorial hall be built in his honor