மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும்.. இல்லையென்றால்..? இண்டியா கூட்டணி கூட்டத்தில் முக்கிய முடிவு..!
A key decision was taken at the INDIA bloc meeting that Dharmendra Pradhan must resign immediately
நாட்டில் ஐந்து மாநிலங்களின் தேர்தலுக்கு பின்பு இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி ஆகிய தலைவர்கள் பங்கேற்றனர்.
இவர்களுடன், தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சுலே, இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த ஜான் பிரிட்டாஸ், தீபங்கர் பட்டாச்சார்யா, சந்தோஷ் குமார், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, புரட்சிகர சோசலிச கட்சியின் எம்.பி பிரேமசந்திரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக பிற தலைவர்களுடன் சேர்ந்து மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், இன்று நடைபெற்ற இண்டியா கூட்டணி கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் 05 முக்கிய அம்சங்களில் தங்கள் ஒப்புதலைத் தெரிவித்துள்ளன என்று அவர் கூறியமை கீழ் வருமாறு;

இண்டியா கூட்டணி கூட்டத்தி ஒப்புக்கொள்ளப்பட்ட 05 முடிவுகள்;
01. லட்சக்கணக்கான மாணவர்களை பாதிக்கும் வகையில் நிகழ்ந்த பல தீவிரமான பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வலியுறுத்துவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
அவரது பதவிக்காலத்தில் நீட் தேர்வு மற்றும் சிபிஎஸ்இ தேர்வுகளில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக லட்சக்கணக்கான இளைஞர்கள் வீதிகளில் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
02. நாட்டில் தற்போது நிலவும் தீவிர பொருளாதார நெருக்கடி, அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், அத்துமீறல்கள், விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க மத்திய அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அந்த கூட்டத்தில் நாங்கள் இந்த விவகாரங்கள் குறித்துப் பேசுவோம்.

03. இண்டியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூடி ஆலோசனை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் நடைபெறும்.
04. வாக்காளர் பட்டியல் மற்றும் நேர்மையான தேர்தல் ஆகியவற்றில் நடைபெறும் தலையீடுகள் குறித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுத முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் மிக விரைவில் தலைமை நீதிபதியிடம் வழங்கப்படும்.
05. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது இண்டியா கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு தொடரும். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் தினமும் காலையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்படும்.
English Summary
A key decision was taken at the INDIA bloc meeting that Dharmendra Pradhan must resign immediately