தமிழ்நாட்டின் நெஞ்சில் ஈட்டி பாய்ச்சும் செயல்..! காவிரி உரிமையைத் தட்டிப்பறிக்க பாஜக முயற்சி...! - வைகோ கடும் கண்டனம்..!
act spearing heart Tamil Nadu BJP attempt snatch Cauvery rights Vaiko strongly condemns
மேகதாது அணை திட்டம் தொடர்பாக ஒன்றிய அரசின் சமீபத்திய விளக்கம், தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய முன்னோட்டமாக இருக்கலாம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடும் கவலை தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு மிகுந்த விழிப்புணர்வுடனும், உறுதியான நிலைப்பாட்டுடனும் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலங்களவையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய நீர்வளத்துறை இணை அமைச்சர் ஸ்ரீ ராஜ் பூஷண் சவுத்ரி அளித்த பதில் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிலில், 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி வழக்குத் தீர்ப்பில், கர்நாடகம் காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி ஒவ்வொரு மாநிலமும் தனது எல்லைக்குள் நீர்வளத்தை தங்களது தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளும் அதிகாரம் பெற்றுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்திருந்ததாக வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விளக்கம், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு மறைமுகமாக பச்சைக்கொடி காட்டும் முயற்சியாகவே தெரிகிறது என்று வைகோ விமர்சித்துள்ளார்.மேலும், 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை உறுதிப்படுத்துவதாகும் என்றும், அந்தத் தீர்ப்பின் அடிப்படை நோக்கம் மிகவும் தெளிவானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதாவது, ஒவ்வொரு மாநிலமும் தனது எல்லைக்குள் உள்ள நீர்வளத்தை பயன்படுத்தும் உரிமை பெற்றிருந்தாலும், அந்த நடவடிக்கையால் கீழ்ப்பகுதி மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நீர்வரத்து எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதே உச்சநீதிமன்றத்தின் முக்கியக் கொள்கை என்று அவர் விளக்கியுள்ளார்.
குறிப்பாக, மேல்பகுதி மாநிலமான கர்நாடகம் மேற்கொள்ளும் எந்தத் திட்டமும், கீழ்ப்பகுதி மாநிலமான தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீரின் அளவை குறைக்கும் வகையில் இருக்கக் கூடாது என்பதே உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மையக் கருத்து என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பையும், உச்சநீதிமன்றத்தின் தெளிவான உத்தரவையும் பலவீனப்படுத்தும் வகையில், மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு மறைமுகமாக அனுமதி வழங்க முயற்சிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு இந்த விவகாரத்தில் எந்தவித சமரசத்திற்கும் இடமளிக்கக் கூடாது என்றும், மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தும் நிலைப்பாட்டையே முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச நீர்ப் பங்கீட்டு நடைமுறைகள், இயற்கை நீதி மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகிய அனைத்தும் தமிழ்நாட்டின் உரிமையை உறுதி செய்கின்றன. எனவே, தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீர் பங்கீட்டை பாதிக்கும் எந்த முயற்சியையும் சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உறுதியாக எதிர்த்து முறியடிக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் வைகோ வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
act spearing heart Tamil Nadu BJP attempt snatch Cauvery rights Vaiko strongly condemns