இனி பாக்கெட்டில் நனையாது... கிழியாது...! இந்தியாவில் அறிமுகமாகும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்...ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அனுமதி!
No more getting wet your pocket no more tearing Plastic banknotes introduced India Central government gives approval Reserve Bank
இந்திய ரூபாய் நோட்டுகளின் தரம், நீடித்த பயன்பாடு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், பாரம்பரிய காகித ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக பாலிமர் (பிளாஸ்டிக்) ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் ரிசர்வ் வங்கியின் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான பாலிமர் ரூபாய் நோட்டுகளை சோதனை அடிப்படையில் அச்சிட்டு புழக்கத்தில் விட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முயற்சியின் ஒரு பகுதியாக, ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான பாலிமர் நோட்டுகள் தலா 100 கோடி எண்ணிக்கையில் அச்சடிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைத் திட்டம் வெற்றிகரமாக அமையும் பட்சத்தில், எதிர்காலத்தில் பாலிமர் ரூபாய் நோட்டுகளை நாடு முழுவதும் வழக்கமான பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற மக்களவையில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது பயன்பாட்டில் உள்ள காகித ரூபாய் நோட்டுகள் செல்லாது போகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, காகித ரூபாய் நோட்டுகளை உடனடியாக திரும்பப் பெறும் எந்தத் திட்டமும் தற்போது இல்லை என்றும், காகித நோட்டுகளுடன் பாலிமர் நோட்டுகளும் இணையாக புழக்கத்தில் இருக்கும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
பாலிமர் ரூபாய் நோட்டுகளின் முக்கிய சிறப்பம்சங்களில், காகித நோட்டுகளை விட பல மடங்கு அதிக காலம் பயன்படுத்தக்கூடிய தன்மை குறிப்பிடத்தக்கதாகும். மேலும், அவை தண்ணீரால் எளிதில் சேதமடையாது, கிழிவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு, அழுக்கு படிவதும் குறைவாக இருக்கும்.
இதனால் நீண்டகாலம் நல்ல நிலையில் பயன்படுத்த முடியும்.அதுமட்டுமல்லாமல், பாலிமர் நோட்டுகளில் நவீன பாதுகாப்பு அம்சங்களை எளிதாக இணைக்க முடிவதால், போலி ரூபாய் நோட்டுகளை தயாரிப்பது மிகவும் சிரமமாகும். இதன் மூலம் போலி நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்துவதிலும் இந்த புதிய தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, ரூ.10 மற்றும் ரூ.20 போன்ற குறைந்த மதிப்புள்ள காகித நோட்டுகள் தினசரி பரிவர்த்தனைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுவதால் அவை மிக விரைவாக பழுதடைந்து பயன்பாட்டிற்கு ஒவ்வாத நிலைக்கு சென்றுவிடுகின்றன. இதன் காரணமாக அவற்றை அடிக்கடி புதிதாக அச்சடிக்க வேண்டிய கட்டாயம் ரிசர்வ் வங்கிக்கு ஏற்பட்டு, அச்சடிப்பு செலவும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
இந்த செலவினத்தை குறைப்பதோடு, நீடித்த மற்றும் பாதுகாப்பான நாணயப் பயன்பாட்டை உறுதி செய்வதற்காகவே பாலிமர் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டம் பல ஆண்டுகளாக பரிசீலனையில் இருந்து வந்தது. ஏற்கனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் பாலிமர் நாணய முறை வெற்றிகரமாக நடைமுறையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
No more getting wet your pocket no more tearing Plastic banknotes introduced India Central government gives approval Reserve Bank