மெகா இழப்பீடு கொடுத்து தப்பிக்கும் ஜான்சன்ஸ்...! புற்றுநோய் வழக்குகளை முடிக்க ரூ.53,000 கோடி கொடுக்க ஒப்பந்தம்...! - Seithipunal
Seithipunal


ஜான்சன் & ஜான்சன் மற்றும் அதன் துணை நிறுவனமான கென்வியூ நிறுவனம் தயாரித்த குழந்தைகள் பயன்படுத்தும் டால்கம் பவுடர் உள்ளிட்ட டால்க் சார்ந்த பொருட்கள் கருப்பைப் புற்றுநோயை ஏற்படுத்தியதாக அமெரிக்காவில் தொடரப்பட்ட பல்லாயிரக்கணக்கான வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சுமார் 5.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.52,668 கோடி) இழப்பீடு வழங்க நிறுவனம் சமரச முன்மொழிவை வெளியிட்டுள்ளது.

ஆனால், தங்களின் டால்க் அடிப்படையிலான எந்தவொரு தயாரிப்பும் புற்றுநோயை ஏற்படுத்தும் என்ற குற்றச்சாட்டை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. நூற்றாண்டுக்கும் மேலாக உலகம் முழுவதும் தரநிலைகளைப் பின்பற்றி குழந்தைகள் பயன்படுத்தும் பவுடரை விற்பனை செய்து வருவதாகவும், தங்கள் தயாரிப்புகள் பாதுகாப்பானவை என்பதில் நிறுவனம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், நீண்டகால சட்டப் போராட்டங்களுக்கு முடிவுகட்டும் நோக்கில் மட்டுமே இந்த சமரச முடிவு எடுக்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.மேலும், இதுவரை நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்ட பெரும்பாலான வழக்குகளில் தங்களுக்கு சாதகமான தீர்ப்புகளே கிடைத்துள்ளதாகவும், சட்டப் போராட்டம் தொடர்ந்திருந்தாலும் இறுதியில் வெற்றி பெற்றிருப்போம் என்ற நம்பிக்கை நிறுவனத்துக்கு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.ஜான்சன்ஸ் பேபி பவுடரில் பயன்படுத்தப்பட்ட டால்கம் துகள்களில் புற்றுநோயைத் தூண்டும் ஆஸ்பெஸ்டாஸ் கலந்திருந்ததாகக் குற்றம்சாட்டிய அமெரிக்காவின் பல்லாயிரக்கணக்கான பெண்கள், அதன் தொடர்ச்சியாக தங்களுக்கு கருப்பைப் புற்றுநோய் ஏற்பட்டதாக நீதிமன்றங்களை நாடினர்.

அதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவின் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சுமார் 76 ஆயிரம் வழக்குகளை ஒரே ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், 2027-ஆம் ஆண்டில் முதற்கட்டமாக சுமார் ரூ.29 ஆயிரம் கோடி (3 பில்லியன் டாலர்) வழங்கவும், மீதமுள்ள தொகையை 2028-ஆம் ஆண்டில் செலுத்தவும் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

எனினும், இந்த இழப்பீட்டு ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு, வழக்குத் தொடுத்தவர்களில் குறைந்தது 95 சதவீதம் பேர் சம்மதம் தெரிவிக்க வேண்டிய கட்டாய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.டால்க் என்பது மெக்னீசியம், சிலிக்கான், ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் ஆகிய தனிமங்களால் உருவாகும் இயற்கை கனிமமாகும்.

மிகுந்த மென்மை மற்றும் வழுவழுப்பான தன்மை கொண்ட இந்தக் கனிமம், பல ஆண்டுகளாக குழந்தைகள் பயன்படுத்தும் பவுடர்களில் முக்கிய மூலப்பொருளாக இடம்பிடித்துள்ளது.பொதுவாக டால்க், கல்நார் படிவங்கள் காணப்படும் பாறைப் பகுதிகளுக்கு அருகில் இயற்கையாக உருவாகிறது. கல்நார் (ஆஸ்பெஸ்டாஸ்) மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான பொருளாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

எனவே, டால்க் சுரங்கங்களில் ஆஸ்பெஸ்டாஸ் கலப்பு ஏற்படும் அபாயம் குறித்து நீண்டகாலமாக அறிவியல் மற்றும் சட்ட ரீதியான விவாதங்கள் நீடித்து வருகின்றன.இந்த சர்ச்சைகள் உலகளவில் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் 2020-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் டால்கம் அடிப்படையிலான பேபி பவுடர் விற்பனையை நிறுத்தியது.

பின்னர் 2023-ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் அந்த தயாரிப்பை முற்றிலும் திரும்பப் பெற்றதுடன், அதற்குப் பதிலாக சோளமாவு அடிப்படையிலான குழந்தைகள் பவுடர்களை சந்தையில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Johnsons escapes by paying mega compensation Agreement pay 53000 crore settle cancer cases


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->