6 டன் ‘புளூபேர்ட்’ விண்ணில் பாய்ந்தது…! பாகுபலி LVM-3 மூலம் உலகை திரும்பிப் பார்க்க வைத்த இஸ்ரோ! - பாராட்டிய மோடி
6ton Bluebird soared space ISRO made world take notice Bahubali LVM 3 Modi praised them
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மீண்டும் உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளது. இதுவரை பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. போன்ற ராக்கெட்டுகள் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வந்த இஸ்ரோ, இந்த முறை வரலாற்றுச் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.
அதாவது, சுமார் 6 டன் எடையுள்ள மிகப்பெரிய செயற்கைக்கோளை முதன்முறையாக இந்திய மண்ணிலிருந்து விண்ணில் ஏவுவதில் இஸ்ரோ வெற்றி பெற்றுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று காலை 8.54 மணிக்கு, சக்திவாய்ந்த எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் ‘புளூபேர்ட்’ தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது.

திட்டமிட்டபடி துல்லியமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்த சாதனை குறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இந்திய விண்வெளித் துறையின் வளர்ச்சியில் இது ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்ட மிகப்பெரிய செயற்கைக்கோளான அமெரிக்காவின் ‘புளூபேர்ட்’ செயற்கைக்கோளை LVM3-M6 ராக்கெட் வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது, இந்தியாவின் விண்வெளிப் பயணத்திற்கு பெருமை சேர்த்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வணிக ரீதியிலான ராக்கெட் ஏவுதள சேவைகளில் இந்தியா உலக சந்தையில் தன்னுடைய இடத்தை உறுதிப்படுத்தி வருவதாகவும், இது வளர்ந்து வரும், தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை நோக்கிய முயற்சிகளின் பிரதிபலிப்பாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த சாதனைக்கு பின்னால் உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்களுக்கு அவர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.இந்திய இளைஞர்களின் பங்களிப்பால் இயக்கப்படும் விண்வெளித் திட்டம் நாளுக்கு நாள் மேம்பட்டு, உலகளவில் தாக்கம் ஏற்படுத்தும் நிலையில் இருப்பதாகவும், எல்.வி.எம்-3 ராக்கெட்டின் செயல்திறன், ககன்யான் உள்ளிட்ட எதிர்கால மனித விண்வெளித் திட்டங்களுக்கு வலுவான அடித்தளமாக அமையும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வணிக ஏவுதள சேவைகள் விரிவடைவதன் மூலம், இந்த உயர்ந்த திறனும் தன்னம்பிக்கையும் வரும் தலைமுறைகளுக்கு ஊக்கமாக இருக்கும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
6ton Bluebird soared space ISRO made world take notice Bahubali LVM 3 Modi praised them