54 தொகுதிகள்! 3அமைச்சர் பதவி..பாஜக போட்ட கண்டிசன்! "பாஜக துணை முதல்வர்".. அமித் ஷா ஆக்சன்! அதிர்ச்சியில் அதிமுக!
54 seats 3 ministerial posts BJP condition BJP Deputy Chief Minister Amit Shah action AIADMK in shock
வரவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக–பாஜக கூட்டணியில் அதிகாரப் பகிர்வு குறித்து தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அதிமுக தலைமைக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆட்சியில் பங்குபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் பாஜக, அமைச்சரவை பதவிகள் மட்டுமல்லாமல் துணை முதல்வர் பதவியையும் இப்போதே முன்வைத்து கோரியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இடையே சமீபத்தில் நடைபெற்ற சந்திப்பில், இந்த கோரிக்கைகள் நேரடியாக முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாஜக தரப்பில் மொத்தமாக 6 அமைச்சரவை பதவிகள் வேண்டும் என்றும், அதில் 3 முக்கிய துறைகள் தங்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, அறநிலையத்துறை, பள்ளி கல்வித்துறை மற்றும் சட்டத்துறை ஆகிய துறைகளை பாஜக முன்கூட்டியே “ரிசர்வ்” செய்து வைத்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனுடன், தமிழ்நாடு அரசியலில் முதல்முறையாக துணை முதல்வர் பதவியையும் பாஜக கோர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆட்சியில் நேரடி பங்கு பெறுவதன் மூலம், தங்களின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியும் என்ற கணக்கில் பாஜக இந்த அணுகுமுறையை எடுத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
தொகுதி பங்கீடு விவகாரத்திலும் பாஜக கடுமையான கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. கட்சி வட்டாரங்களின்படி, பாஜக சுமார் 54 சட்டமன்றத் தொகுதிகளை கேட்டுள்ளது. தமிழகத்தில் பாஜகவின் கடந்த தேர்தல் செயல்பாடுகளை கருத்தில் கொண்டால், இந்த கோரிக்கை அதிமுக எதிர்பார்த்ததை விட அதிகம் என்றும், இதனால் இபிஎஸ் மற்றும் அவரது நெருங்கிய வட்டத்தில் கவலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கோவை உள்ளிட்ட சில பகுதிகளில் அதிக இடங்களை பாஜக கோரியிருப்பது அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ், அமித் ஷாவுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்ததாகவும், தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து விரிவாக பேசப்பட்டதாகவும் தெரிவித்தார். “திமுகவை தோற்கடித்து ஆட்சியைப் பிடிப்பதே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நோக்கம்” என அவர் உறுதிபட கூறினார். அதே சமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணியை தமிழ்நாட்டில் அதிமுகவே வழிநடத்தும் என்றும் இபிஎஸ் தெளிவுபடுத்தினார்.
வி.கே. சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “அவர்களை கட்சிக்குள் சேர்க்கும் எண்ணம் இல்லை” என்று இபிஎஸ் திட்டவட்டமாக பதிலளித்தார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) குறித்து, “சில கட்சிகள் பேச்சுவார்த்தையில் உள்ளன; நேரம் வரும்போது அறிவிக்கப்படும்” என்ற மட்டுமே அவர் கூறினார்.
மொத்தத்தில், ஆட்சிப் பங்கீடு, முக்கிய அமைச்சரவை துறைகள், துணை முதல்வர் பதவி மற்றும் அதிக தொகுதிகள் என பாஜக முன்வைத்த கோரிக்கைகள், அதிமுக தலைமையில் பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2026 தேர்தலை முன்னிட்டு, இந்த கூட்டணி பேச்சுவார்த்தைகள் இன்னும் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
54 seats 3 ministerial posts BJP condition BJP Deputy Chief Minister Amit Shah action AIADMK in shock