3 கோப்புகள் விவகாரம்... விஜய்க்கு எதிராக உரிமை மீறல் தீர்மானமா...? - துரைமுருகன் பரபரப்பு பேச்சு
3 files issue Is it decision infringement against Vijay Duraimurugan sensational speech
வேலூரில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது,"யார் ஆட்சிக்கு வந்தாலும், தங்களுக்குப் பிறகு வேறு யாரும் வர முடியாது என்ற எண்ணத்தில்தான் பேசுவார்கள். அதேபோலத்தான் தற்போது த.வெ.க.வினரும், இனி தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது என்று கூறி வருகின்றனர்.

இதுபோன்ற கருத்துகளை ஏற்கனவே எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்களையும் தி.மு.க. தேர்தலில் வெற்றி கொண்டிருக்கிறது. எனவே, இதுபோன்ற பேச்சுகள் அரசியல் அனுபவத்தையும் தெளிவையும் வெளிப்படுத்துவதாக இல்லை.
என் மேஜையில் 3 கோப்புகள் இருப்பதாகவும், அவற்றைத் திறக்க வைத்து விட வேண்டாம் என்றும் முதலமைச்சர் விஜய் சட்டசபையில் கூறியுள்ளார்.
இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் துணிச்சலான சவாலை முன்வைத்துள்ளார். தைரியம் இருந்தால் அந்தக் கோப்புகளைத் திறந்து, அதில் யார் மீது குற்றச்சாட்டு இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவரது வலியுறுத்தல்.
எனவே, அந்தக் கோப்புகளை உடனடியாகத் திறக்குமாறு எதிர்க்கட்சிகள் சட்டசபையில் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.
ஒரு வாரத்துக்குள் அவை திறக்கப்படாவிட்டால், சட்டசபைக்கு முதலமைச்சர் தவறான தகவலைத் தெரிவித்துள்ளார் எனக் கூறி உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.
சட்டசபை என்பது அரசியல் கருத்துகளை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் களம். எதிர்க்கட்சியினர் தங்களது கேள்விகளையும் விமர்சனங்களையும் வலுவாக முன்வைக்க வேண்டும்.
அதற்கு ஆளும் கட்சியினர் உரிய பதில்களை அளித்து எதிர்கொள்ள வேண்டும். இதுதான் சட்டசபையின் ஜனநாயக நடைமுறை” என்று துரைமுருகன் தெரிவித்தார்.
English Summary
3 files issue Is it decision infringement against Vijay Duraimurugan sensational speech