“சட்டசபையே ரீல்ஸுக்காக நடத்தப்படுவது போன்ற உணர்வு” – தவெக அரசை விமர்சித்த கனிமொழி
It feels as though the Assembly proceedings are being conducted merely for Reels Kanimozhi criticizes the TVK government
தவெக ஆட்சியில் சட்டசபை நடவடிக்கைகள் ரீல்ஸுக்காகவே நடத்தப்படுவது போன்ற உணர்வு உருவாகி வருவதாக திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், அவற்றில் தவெகவினரின் தொடர்பு இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், சட்டசபையில் முதல் முறையாக பங்கேற்று வரும் தவெக உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சில பேச்சுகள் தொடர்ந்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவது விவாதமாகியுள்ளது.
அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், ரமேஷ் உள்ளிட்டோர் பேசிய சில வார்த்தைகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அமைச்சர் ரமேஷின் பேச்சை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தபோது, “நீக்கிக்கொள்ளுங்கள்” என்று அவர் பதிலளித்த சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதேபோல், சட்டசபையில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படும் பேச்சுகள் தொடர்பான வீடியோ காட்சிகளை தவெகவினர் சமூக வலைதளங்களில் ரீல்ஸ்களாக வெளியிட்டு வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, தவெக ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம் ஒழுங்கு தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதாக தெரிவித்தார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், ஆணவக் கொலைகள், லாக்-அப் மரணங்கள் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறிய அவர், இதில் சில சம்பவங்களில் தவெகவினரின் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார். தவெகவினர் தொடர்புடையதாக கூறப்படும் அனைத்து வழக்குகளிலும் ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளதாக கனிமொழி தெரிவித்தார்.
தொடர்ந்து சட்டசபை செயல்பாடுகளையும் விமர்சித்த அவர், “சட்டசபையே ரீல்ஸுக்காகத்தான் நடத்தப்படுகிறது என்ற உணர்வை தவெகவினர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.
சட்டசபையில் பேசப்படும் சர்ச்சைக்குரிய கருத்துகள் பின்னர் சமூக வலைதளங்களில் ரீல்ஸ்களாக பரப்பப்படுவது குறித்தே கனிமொழி இவ்வாறு விமர்சித்ததாக கூறப்படுகிறது. அவரது இந்த கருத்து தற்போது திமுகவினர் மத்தியில் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
English Summary
It feels as though the Assembly proceedings are being conducted merely for Reels Kanimozhi criticizes the TVK government