5 தொகுதி இடைத்தேர்தல்: சென்னை உயர்நீதிமன்றத்தின் தடை இன்றுடன் நிறைவு – இன்று மீண்டும் விசாரணை! - Seithipunal
Seithipunal


தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் விதித்திருந்த தடை இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் பெரம்பூர் தொகுதியை வைத்துக்கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

அதேபோல் கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர், பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமார் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோரும் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற பின்னர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததாக கூறப்படுகிறது.

இந்த தொகுதிகளின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இடைத்தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வு, தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வருவதற்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் அரசு பணம் செலவாகும் என்றும், ஒரே தொகுதிக்கு இரு மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படும் அரசியல் சாசன சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டது.

இதையடுத்து, 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கப்பட்டதுடன், இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டப்பேரவை செயலாளர், முதலமைச்சர் விஜய் மற்றும் சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு கடந்த ஜூலை 31ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையையும் அதுவரை நீட்டித்தனர்.

அந்த தடை இன்றுடன் முடிவடையும் நிலையில், இன்று நடைபெறும் விசாரணையில் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுமா அல்லது தொடர்ந்து நீட்டிக்கப்படுமா என்பது முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

ஒரு சட்டமன்றத் தொகுதி காலியாகும் பட்சத்தில், பொதுவாக 6 மாதங்களுக்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், இந்த தொகுதிகளுக்கான தேர்தலை டிசம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டிய சூழல் உள்ளது.

இதனால் இன்று நீதிமன்றம் எடுக்கப்போகும் முடிவை அரசியல் கட்சிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. தமிழகத்தில் தற்போது திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் என மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Byelections for 5 constituencies Madras High Court stay expires today hearing resumes today


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->