உங்கள் முகப்பருவுக்கு நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள்தான் காரணமா...? இன்றே 'நோ' சொல்லுங்கள்...!
Are these foods you eat causing your acne Say no today
இன்றைய காலத்தில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் அழகியல் சிக்கல்களில் முக்கியமானது முகப்பரு. விலையுயர்ந்த அழகு சாதனங்களைப் பயன்படுத்தியும் பருக்கள் குறையவில்லை என்றால், அதற்கான காரணம் உங்கள் உணவுப் பழக்கமாக இருக்கலாம். சரும நிபுணர்களின் கருத்துப்படி, சில உணவுகள் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தி, அதிகப்படியான எண்ணெய் சுரப்பை தூண்டுவதன் மூலம் முகப்பருக்களை அதிகரிக்கக்கூடும்.
பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள்
பாலில் உள்ள சில இயற்கை ஹார்மோன்கள் மற்றும் வளர்ச்சியைத் தூண்டும் கூறுகள், சருமத் துளைகளை அடைத்து முகப்பரு உருவாக வழிவகுக்கலாம். கடுமையான பரு பிரச்சினை உள்ளவர்கள், சில வாரங்கள் பால், சீஸ், பன்னீர் போன்றவற்றைத் தவிர்த்து மாற்றத்தை கவனிக்கலாம்.

சர்க்கரை நிறைந்த இனிப்புகள்
சாக்லேட், கேக், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் போன்றவற்றில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, இரத்தச் சர்க்கரை அளவை வேகமாக உயர்த்துகிறது. இதன் காரணமாக இன்சுலின் சுரப்பு அதிகரித்து, முகத்தில் எண்ணெய் பசை அதிகமாகி பருக்கள் தோன்றும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
துரித உணவுகள்
பீட்சா, பர்கர், பிரெஞ்ச் பிரைஸ், சிப்ஸ், சமோசா போன்ற எண்ணெய் மற்றும் மைதா அதிகம் கொண்ட உணவுகள் உடலில் அழற்சியை அதிகரிக்கக்கூடும். இதனால் புதிய பருக்கள் தோன்றுவதோடு, ஏற்கனவே உள்ள பருக்களும் தீவிரமடையலாம்.
சாக்லேட் வகைகள்
அதிக சர்க்கரை மற்றும் பால் கலந்த மில்க் சாக்லேட்டுகள் சிலருக்கு முகப்பரு பிரச்சினையை அதிகரிக்கக்கூடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதற்கு மாற்றாக குறைந்த சர்க்கரை கொண்ட டார்க் சாக்லேட்டை அளவோடு எடுத்துக்கொள்வது சிறந்த தேர்வாக இருக்கலாம்.
காரம் மற்றும் மசாலா அதிகமான உணவுகள்
அளவுக்கு மீறிய காரம், மசாலா மற்றும் வினிகர் சேர்க்கப்பட்ட உணவுகள் சிலருக்கு சருமத்தில் சிவப்பு நிற வீக்கம் மற்றும் பருக்கள் உருவாகக் காரணமாக இருக்கலாம்.
பளபளப்பான சருமத்திற்கு என்ன செய்ய வேண்டும்?
தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்தி உடலை நீர்ச்சத்துடன் வைத்திருப்பது அவசியம். கீரைகள், வெள்ளரிக்காய், தக்காளி, நெல்லிக்காய், ஆரஞ்சு போன்ற வைட்டமின் சி நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும், பருப்பு வகைகள், கொட்டைகள் மற்றும் முழுத்தானியங்களை அளவாகச் சாப்பிடுவது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலுக்கும் தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது.
English Summary
Are these foods you eat causing your acne Say no today