விலையுயர்ந்த கிரீம்கள் எதுக்கு...? சோம்பை வச்சே 'பளபள' சருமம் பெறலாம்...! - 5 எளிய பியூட்டி சீக்ரெட்ஸ்...!
Why expensive creams You can get glowing skin zombie 5 simple beauty secrets
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் சுற்றுச்சூழல் மாசு, தூசி, மனஅழுத்தம் மற்றும் சீரற்ற உணவுப் பழக்கங்கள் காரணமாக சருமப் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக முகப்பரு, கரும்புள்ளி, திறந்த சருமத் துளைகள், கண் வீக்கம் மற்றும் சரும வறட்சி போன்ற சிக்கல்களால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்காக விலையுயர்ந்த அழகு கிரீம்கள் மற்றும் பார்லர் சிகிச்சைகளை நாடுபவர்கள் ஏராளம்.
ஆனால் நம் சமையலறையில் எளிதாக கிடைக்கும் சோம்பு அல்லது பெருஞ்சீரகம் சரும ஆரோக்கியத்திற்கு அற்புதமான இயற்கை மருந்தாக விளங்குகிறது என்பது பலருக்கும் தெரியாத உண்மை. ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துகள், வைட்டமின் சி, இரும்புச்சத்து மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மைகள் நிறைந்த சோம்பு, சருமத்தை இயற்கையாக சுத்தப்படுத்தி இளமையான தோற்றத்தை பாதுகாக்க உதவுகிறது.

மேலும், உடலில் தேங்கும் நச்சுக்களை வெளியேற்றி ரத்த ஓட்டத்தை சீராக்குவதன் மூலம் முகத்திற்கு இயற்கையான பொலிவையும் வழங்குகிறது.வயதான தோற்றத்தை தாமதப்படுத்த சோம்பு டோனர் சிறந்த இயற்கை பராமரிப்பாக பார்க்கப்படுகிறது. ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சோம்பை சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து, தண்ணீர் பாதியாக குறைந்ததும் வடிகட்டி ஆறவிட வேண்டும். பின்னர் அதை ஸ்ப்ரே பாட்டிலில் சேமித்து வைத்து தினமும் முகத்தை கழுவிய பின் டோனராக பயன்படுத்தலாம்.
இது சருமத் துளைகளை இறுக்கமாக்கி, முகத்தில் தோன்றும் சுருக்கங்களை குறைக்க உதவுகிறது. தொடர்ந்து பயன்படுத்தினால் முகம் புத்துணர்ச்சியுடனும் மென்மையுடனும் காணப்படும்.முகப்பரு மற்றும் அதிக எண்ணெய் பசை பிரச்சனைகளுக்கும் சோம்பு சிறந்த தீர்வாக அமைகிறது.
லேசாக வறுத்த சோம்பை பொடி செய்து அதனுடன் தேன் மற்றும் சில துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பேக் போல தடவலாம். சுமார் 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகப்பருக்கள் குறைவதுடன், பருக்களால் ஏற்பட்ட கருமையும் மெல்ல மறையும். சோம்பில் உள்ள இயற்கை கிருமி எதிர்ப்பு தன்மைகள் சருமத்தை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகின்றன.
கண் வீக்கம் மற்றும் கருவளையத்தை குறைக்கவும் சோம்பு நீர் சிறந்த வீட்டுவழி பராமரிப்பாக கருதப்படுகிறது. சோம்பு கொதிக்கவைத்த நீரை குளிரவைத்து, அதில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்தால் கண்களுக்கு உடனடி குளிர்ச்சி கிடைக்கும். நீண்ட நேரம் செல்பேசி அல்லது மடிக்கணினி பயன்படுத்துபவர்களுக்கு இது நல்ல நிவாரணம் தரும்.
கண் சோர்வும் குறைந்து முகம் புத்துணர்ச்சியுடன் தோன்றும்.மேலும், முகத்தை ஆழமாக சுத்தப்படுத்த சோம்பு ஆவி பிடிப்பதும் நல்ல பலனை அளிக்கிறது. சூடான நீரில் சோம்பு மற்றும் ரோஜா இதழ்களை சேர்த்து ஆவி பிடித்தால், முகத்தில் இருக்கும் அழுக்கு, கரும்புள்ளி மற்றும் இறந்த செல்கள் மென்மையாகி நீங்கும்.
இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து முகத்திற்கு உடனடி பொலிவை வழங்குகிறது. பார்லருக்கு செல்லாமல் வீட்டிலேயே இயற்கை ஸ்பா அனுபவத்தை பெற முடியும் என தெரிவிக்கப்படுகிறது.சருமத்தை மிருதுவாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க சோம்பு ஸ்க்ரப் உதவுகிறது. கரகரப்பாக அரைத்த சோம்புப் பொடியுடன் தயிர் அல்லது பால் கிரீம் கலந்து மெதுவாக முகத்தில் மசாஜ் செய்தால் இறந்த செல்கள் நீங்கி சருமம் மென்மையாக மாறும்.
வாரத்திற்கு ஒருமுறை இதை பயன்படுத்தினால் முகம் ஆரோக்கியமான தோற்றத்தை பெறும்.இதுமட்டுமின்றி, காலையில் வெறும் வயிற்றில் சோம்பு நீர் குடிப்பதும் சருமத்திற்கு பல நன்மைகளை அளிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி செரிமானத்தை சீராக்குவதால் முகத்தில் இயற்கையான பொலிவு உருவாக உதவுகிறது.
உடல் சூட்டை தணிக்கும் தன்மையும் சோம்புக்கு இருப்பதால் கோடை காலங்களில் இது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.எனினும், எந்த இயற்கை பொருளாக இருந்தாலும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், முதல்முறையாக பயன்படுத்தும் முன் காதின் பின்புறம் அல்லது கையின் உட்பகுதியில் சிறிதளவு தடவி பரிசோதித்து பார்க்க வேண்டும்.
ஒவ்வாமை இல்லையென உறுதிப்படுத்திய பின்பே முகத்தில் பயன்படுத்துவது பாதுகாப்பான நடைமுறையாகும். இயற்கை முறையில் சருமத்தை பராமரிக்க விரும்புபவர்களுக்கு சோம்பு ஒரு எளிய, மலிவான மற்றும் பயனுள்ள அழகு ரகசியமாக திகழ்கிறது.
English Summary
Why expensive creams You can get glowing skin zombie 5 simple beauty secrets