'அரசியலில் பெண்கள் நுழைவது இப்படித்தான்'; அவதூறாக பேசிய பப்பு யாதவ் எம்.பி.க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்..!
Womens Commission Issues Notice to MP Pappu Yadav for Making Derogatory Remarks About Women in Politics
பீகார் மாநிலம், பூர்னியா நாடாளுமன்றத் தொகுதியின் சுயேட்சை எம்.பி.யான பப்பு யாதவ், பெண்கள் குறித்து இழிவாக பேசிய கருத்து சர்ச்சையான நிலையில், இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்டு பீகார் மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மசோதாவுடன் இணைத்து பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு மசோதாவையும் மத்திய அரசு கொண்டு வந்தது. இதனை மேற்கொள்வதற்காக முதலில் 131-வது சட்ட திருத்த மசோதா வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக எதிர்த்தன. அதன் பின்னர் நடந்த நாடாளுமன்ற வாக்கெடுப்பில் 131 வது சட்ட திருத்த மசோதா தோல்வி அடைந்தது. இதன் காரணமாக தொகுதி மறுவரையறை, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாக்கள் திரும்ப பெறப்பட்டன.
இந்நிலையில் பீகார் மாநிலம், பூர்னியா எம்.பி. பப்பு யாதவ், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த போது அவரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் திடீரென பெண்கள் குறித்து அவதூறாகவும், இழிவாகவும் கருத்து தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அதாவது, ''இந்தியாவில் பெண்கள் கடவுள்களாகப் போற்றப்படுகிறார்கள். ஆனால், இங்கு அவர்களுக்கு ஒருபோதும் உரிய மரியாதை கிடைப்பதில்லை. இதற்கு இங்கிருக்கும் அமைப்பும் சமூகமுமே பொறுப்பு. 90 சதவீதப் பெண்களால், அரசியல்வாதிகளின் அறைக்குள் நுழையாமல் அரசியலில் ஈடுபட முடிவதில்ல'' என இழிவாக பேசியுள்ளார்.
இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் பரவி வைரலானது, அதன் பின்னர் பீகார் மாநில மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து இது குறித்தான விசாரணையில் இறங்கியுள்ளது. மேலும் இது தொடர்பாக பப்பு யாதவ் எம்.பி.க்கு 03 நாட்களில் விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பியுள்ளது.
English Summary
Womens Commission Issues Notice to MP Pappu Yadav for Making Derogatory Remarks About Women in Politics